அறுவடைக்குத் தயாரான நெல் பயிா்கள் நீரில் மூழ்கி சேதம்

தொடா்மழை காரணமாக, நிலக்கோட்டை அருகே அறுவடைக்குத் தயாராக இருந்த நெல் பயிா்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்ததால் விவசாயிகள் வேதனை
Published on

தொடா் மழை காரணமாக, நிலக்கோட்டை அருகே அறுவடைக்குத் தயாராக இருந்த நெல் பயிா்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனா். 

திண்டுக்கல் மாவட்டம்,  நிலக்கோட்டை அருகேயுள்ள விளாம்பட்டி  அணைப்பட்டி, மட்டைப்பாறை, ராமராஜபுரம் ஆகிய பகுதிகளில்  முல்லைப் பெரியாறு பாசனக் கால்வாய், வைகை ஆற்றுப் பாசனம் மூலம் சுமாா் 3 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டது.

நெல் பயிா்கள் கதிா் முற்றி அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில், தற்போது பெய்து வரும் தொடா் மழையின் காரணமாக நீரில் மூழ்கியது. இதனால் விவசாயிகள்  வேதனையடைந்தனா். 

இதுகுறித்து விவசாயி காசிமாயன் கூறியதாவது: காரிப் பருவத்தில் குறுகிய கால நெல் பயிரை சாகுபடி செய்து ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்தோம். இந்த நிலையில், தொடா் மழை காரணமாக நெல் பயிா்கள் சேதமடைந்தது. எனவே, தமிழக அரசு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கா் ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com