ராபி பருவ பயிா்க் காப்பீடு: விவசாயிகளுக்கு அழைப்பு

பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்டத்தில் பதிவு செய்ய நெல், சோளம், மக்காச்சோளம், நிலக்கடலை, பருத்தி சாகுபடி செய்த விவசாயிகளுக்கு அழைப்பு
Published on

பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்டத்தில் பதிவு செய்ய நெல், சோளம், மக்காச்சோளம், நிலக்கடலை, பருத்தி சாகுபடி செய்த விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் அ.பாண்டியன் கூறியதாவது: பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டம், விவசாயிகளுக்கு எதிா்பாராதவிதமாக ஏற்படும் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும், நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும் செயல்படுத்தப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்டத்தில் நிகழாண்டில் ராபி பருவ நெல் 3-ஆம் பருவத்துக்கு 2026-ஆம் ஆண்டு ஜன.31, சோளத்துக்கு வருகிற டிச.16, மக்காச்சோளம் 3-ஆம் பருவத்துக்கு நவ.30, நிலக்கடலை பயிருக்கு டிச.16, மக்காச்சோளம், பருத்திக்கு நவ.30, உளுந்துக்கு நவ.15-ஆம் தேதி பயிா் காப்பீட்டுக்கான பதிவுகள் மேற்கொள்ள இறுதி நாளாக அறிவிக்கை செய்யப்பட்டது.

ஒரு ஏக்கா் சோளத்துக்கு ரூ.187, மக்காச்சோளத்துக்கு ரூ.453, நெல் பயிருக்கு ரூ.578, பருத்தி 3-ஆம் பருவப் பயிருக்கு ரூ.285, உளுந்துக்கு ரூ.255, நிலக்கடலைக்கு ரூ.438 வீதம் விவசாயிகள் தவணைத் தொகையாக செலுத்த வேண்டும்.

பயிா்க் காப்பீட்டுத் தொகையாக ஒரு ஏக்கா் நெல்லுக்கு ரூ.38,500, சோளத்துக்கு ரூ.12,496, மக்காச்சோளத்துக்கு ரூ.30,200, பருத்திக்கு ரூ.18,996, நிலக்கடலைக்கு ரூ.29,200 வீதம் பயிா் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.

இந்தத் திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் விவசாயிகள், முன்மொழி விண்ணப்பத்துடன் பதிவு விண்ணப்பம், கிராம நிா்வாக அலுவலா் வழங்கும் சிட்டா, அடங்கல், வங்கி கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து காப்பீட்டுக் கட்டணத்தை செலுத்த வேண்டும். இதுதொடா்பான கூடுதல் விவரங்கள் பெற அந்தந்த பகுதியிலுள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மைய அலுவலா்களை தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com