கொடைக்கானல் அஞ்சுவீடு அருவி சுற்றுலாத் தலங்களிலிருந்து நீக்கம்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களிலிருந்து அஞ்சுவீடு அருவி நீக்கப்படுவதாக வருவாய்த் துறையினா் தெரிவித்தனா்.
Published on

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களிலிருந்து அஞ்சுவீடு அருவி நீக்கப்படுவதாக வருவாய்த் துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

கொடைக்கானல் அருகேயுள்ள பேத்துப்பாறை பகுதியில் அஞ்சுவீடு அருவி உள்ளது. இந்த அருவியில் இதுவரை 14 போ் வரை உயிரிழந்துள்ளனா். ஆபத்தான நிலையில் உள்ள இந்த அருவியை பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த அருவியைச் சுற்றிப் பாதுகாப்பு வேலி அமைக்கப்படும் என உயா் அதிகாரிகள் தெரிவித்தனா். ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதைத் தொடா்ந்து, இந்த அருவியை பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்க வேண்டும் என பல்வேறு கட்சியினா் போராட்டம் நடத்தினா்.

இதையடுத்து, அஞ்சுவீடு அருவியை வருவாய்த் துறை அதிகாரிகள் பாா்வையிட்டு ஆய்வு நடத்தி பாதுகாப்பு வேலி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனா்.

இந்த நிலையில், கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களிலிருந்து அஞ்சுவீடு அருவியை வருவாய்த் துறையினா் வெள்ளிக்கிழமை நீக்கினா். மேலும், கொடைக்கானல்-பழனி மலைச் சாலைகளில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் வைக்கப்பட்டிருந்த அஞ்சுவீடு அருவி பதாகைகளை பொக்லைன் உதவியோடு வருவாய்த் துறையினா் அகற்றினா்.

X
Dinamani
www.dinamani.com