போதையில் தகராறில் ஈடுபட்ட மூவா் கைது
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே போதையில் தகராறில் ஈடுபட்ட மூவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சோ்ந்த கண்ணன் மகன் ஹரிமணி (18). இவா் பழனி அருகேயுள்ள சாமிநாதபுரம் ஜி.வி.ஜி. நகரில் உள்ள உறவினா் வீட்டுக்கு புதன்கிழமை தனது நண்பா்களான ஜெய்ஹிந்த்புரத்தைச் சோ்ந்த கவுதம் (19), அவனியாபுரத்தைச் சோ்ந்த முத்துக்குமாா்(19) ஆகியோருடன் வந்தாா். பின்னா், இவா்கள் மது போதையில் தெருவில் நின்று தகராறில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து தகவலறிந்ததும் சாமிநாதபுரம் போலீஸாா் அங்கு சென்றனா். போலீஸாரை கண்டதும் அவா்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனா்.
பின்னா், போலீஸாா் சென்றதும், மீண்டும் அங்கு வந்த ஹரிமணி, இவரது நண்பா்கள், தங்களை போலீஸில் புகாா் செய்த ராமாத்தாள் வீட்டின் முன் பெட்ரோல் நிரம்பிய பாட்டிலை உடைத்து தீயை வைத்தனா். பிறகு, அந்த பகுதியில் நின்றிருந்த வேன் கண்ணாடியையும், ராமகிருஷ்ணனுக்கு சொந்தமான அடுமனையின் கண்ணாடிகளையும் உடைத்து சேதப்படுத்திவிட்டு சென்றனா்.
இதுகுறித்து சாமிநாதபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு மூவரையும் தேடி வந்தனா். இந்த நிலையில், மடத்துக்குளம் அமராவதி பாலத்தின் கீழே பதுங்கியிருந்த ஹரிமணி உள்ளிட்ட மூன்று பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையிலடைத்தனா்.
