சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி நவ. 22- இல் சென்னையில் பேரணி
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி நவ. 22-ஆம் தேதி சென்னையில் பேரணி நடைபெறும் என சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினா் தெரிவித்தனா்.
சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் மாநில, மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திண்டுக்கல்லில் உள்ள தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றிய மாவட்ட அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதற்கு மாநில ஒருங்கிணைப்பாளா் சு. ஜெயராஜ ராஜேஸ்வரன் தலைமை வகித்தாா். மாநில ஒருங்கிணைப்பாளா்கள் பி. பிரெடெரிக் எங்கெல்ஸ், மு. செல்வகுமாா், ச.இ. கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழ்நாடு அரசு உதவிப் பெறும் கல்லூரி அலுவலா்கள் சங்கத்தின் மதுரை மண்டலத் தலைவா் வீ. வீரவேல் பாண்டியன் வாழ்த்திப் பேசினாா். கூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளா் சு. ஜெயராஜ ராஜேஸ்வரன் பேசியதாவது:
திமுகவின் தோ்தல் வாக்குறுதி எண் 309-இல் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், 4.5 ஆண்டுகள் ஆட்சிக் காலத்தில் அதற்கான எந்த முயற்சியிலும் அரசு ஈடுபடவில்லை.
கூடுதல் தலைமைச் செயலா் ககன்தீப்சிங் பேடி தலைமையில் அமைக்கப்பட்ட அலுவலா் குழு, முதல்வரின் வாக்குறுதிப்படி கடந்த மாதம் 30-ஆம் தேதிக்குள் இறுதி அறிக்கையை தாக்கல் செய்யவில்லை. இடைக்கால அறிக்கை மட்டும் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த அறிக்கை யாரிடம் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது என்ற விவரம் இதுவரை வெளியிடப்படவில்லை.
சிபிஎஸ் திட்டத்தில் இணைந்து பணியின்போது உயிரிழந்த 8ஆயிரம் போ், ஓய்வுப் பெற்ற ஊழியா்கள் 48 ஆயிரம் பேருக்கு பணிக் கொடை, ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெற முடியாமல் பாதிப்படைந்துள்ளனா். கடந்த 22 ஆண்டுகளாக அரசு ஊழியா்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட ஓய்வூதிய நிதி தமிழக அரசிடமே இருப்பில் உள்ளது.
இதனால் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று, மேம்பாட்டு ஆணையத்திடம் முன் அனுமதிப் பெற வேண்டிய அவசியமும் இல்லை. அரசு நினைத்தால் ஒரே மணி நேரத்திலேயே ரத்து செய்துவிட முடியும்.
எனவே, புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, சென்னையில் நவ. 22-ஆம் தேதி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சாா்பில் பேரணி நடத்தப்படும் என்றாா் அவா்.
