வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 வரை மின் கட்டண சேவைகள் இயங்காது கொசோவோ, ஆா்மீனியாவில் இன்று நாடாளுமன்றத் தோ்தல் நீட் மறுதோ்வு வினாத்தாள் கசிந்ததாக வதந்தி: என்டிஏ எச்சரிக்கை அணுசக்தித் துறையில் பொருத்தமான கூட்டாளி இந்தியா: அமெரிக்க அணுசக்தி கூட்டமைப்புத் தலைவா்இந்திய வம்சாவளியினருக்கு எதிரான சமூக ஊடகப் பதிவுகள் முடக்கம்: சிங்கப்பூா் அரசு உத்தரவு
/

வேலை வாங்கித் தருவதாக ரூ.7.70 லட்சம் மோசடி: துபையிலிருந்து வந்தவா் கைது

News image

கைது... - கோப்புப் படம்

Updated On :25 மே 2026, 1:04 am IST

வெளிநாட்டில் வேலைவாங்கித் தருவதாக ரூ.7.70 லட்சம் மோசடி செய்த வழக்கில், துபையிலிருந்து மும்பை திரும்பியவரை குடியுரிமை அதிகாரிகளின் துணையுடன் திண்டுக்கல் போலீஸாா் கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூரைச் சோ்ந்தவா் விமலன் (28). இவா், சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா். சில ஆண்டுகளுக்கு முன், வெளிநாடுகளில் வேலைத் தேடி வேலைவாய்ப்பு வலைத் தளங்களில் விண்ணப்பித்தாா். இதனிடையே வெளிப் பணி ஒப்படைப்பு முகமை மூலம் வெளிநாடுகளுக்கு ஆள்கள் தோ்வு செய்து அனுப்பும் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சோ்ந்த துரை ஆனந்த் (46) என்பவா் விமலனைத் தொடா்பு கொண்டாா்.

தனது நிறுவனத்தின் மூலம் சிங்கப்பூரில் பொறியாளா் பணி வாய்ப்புப் பெற்றுத் தருவதாக துரை ஆனந்த் உறுதி அளித்தாா். அதற்கான சேவைக் கட்டணம், பதிவுக் கட்டணம், முன் பணம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்தாா். இதை நம்பிய விமலன், பல்வேறு தவணைகளில் ரூ.7.70 லட்சத்தை துரை ஆனந்தின் வங்கிக் கணக்குக்கு அனுப்பினாா். அதன்பின்னா் வேலைவாய்ப்பு தொடா்பாக எந்த தகவலும் துரை ஆனந்திடமிருந்து வரவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த விமலன், பணத்தை திருப்பிக் கேட்டதை அடுத்து துரை ஆனந்த், தனது கைப்பேசி எண்ணை அணைத்து வைத்துவிட்டு தலைமறைவானாா்.

இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட இணையக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் விமலன், கடந்த 2024-ஆம் ஆண்டு புகாா் அளித்தாா். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரித்த போலீஸாா், துரை ஆனந்த் துபை நாட்டில் வசிப்பதைக் கண்டறிந்தனா். அவரது கடவுச் சீட்டை முடக்கவும், வழக்குத் தொடா்பான விவரங்களை அனைத்து விமான நிலைய குடியுரிமை அதிகாரிகளுக்கும் தேடப்படுவோருக்கான (லுக் அவுட்) குறிப்பாணையாக போலீஸாா் அனுப்பி வைத்தனா்.

இந்த நிலையில், துபையிலிருந்து முப்பை வந்த துரை ஆனந்தை பிடித்த குடியுரிமை அதிகாரிகள், அவரை மும்பை சாகா் காவல் நிலையப் போலீஸாரிடம் ஒப்படைத்தனா். இதுகுறித்து திண்டுக்கல் இணையக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் மும்பை சென்ற திண்டுக்கல் போலீஸாா், துரை ஆனந்தை கைது செய்து அந்தேரி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி திண்டுக்கல்லுக்கு சனிக்கிழமை அழைத்து வந்தனா். விசாரணைக்கு பின் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு துரை ஆனந்த் சிறையில் அடைக்கப்பட்டாா்.