சுடச்சுட

  

  ரூ. 150 கோடியில் சிறப்பு மருத்துவமனை: 24 மாதங்களில் பணிகளை முடிக்க நடவடிக்கை

  By மதுரை,  |   Published on : 17th July 2013 04:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மதுரையில் ரூ. 150 கோடியில் கட்டப்படவுள்ள மேம்படுத்தப்பட்ட சிறப்பு மருத்துவமனை பணியானது, வரும் 2 மாதங்களில் தொடங்கி 24 மாதங்களில் நிறைவு செய்யப்படவுள்ளது என மத்திய குடும்ப நலம் மற்றும் சுகாதாரத்துறை இணைச் செயலர் சந்தீப் கே.நாயக் கூறினார்.

   மதுரை மருத்துவக் கல்லூரி மைதானத்தின் ஒரு பகுதியில், சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள மேம்படுத்தப்பட்ட சிறப்பு மருத்துவமனைக்கான இடத்தை செவ்வாய்க்கிழமை அவர் ஆய்வுமேற்கொண்டார்.

   அதன்பின் நடந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர்  கூறியதாவது:

   மத்திய, மாநில அரசுகள் உதவியுடன் மேம்படுத்தப்பட்ட இந்த மருத்துவமனை அமைய உள்ளது. அதற்கான நிதி ரூ. 125 கோடியை மத்திய அரசும், ரூ. 25 கோடியை மாநில அரசும் ஒதுக்கி உள்ளன. பிரதமரின் சுவஸ்திக் சுரக்க்ஷô யோஜனா திட்டத்தின் கீழ் இம்மருத்துவமனை அமைக்கப்படுகிறது.

    வரும் 23 ஆம் தேதி மருத்துவமனை தொடக்கப் பணிகளுக்கான உயர்நிலை  ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. அதில் முதல்வர் பங்கேற்கவும் அழைக்கப்பட்டுள்ளார். அதில் மதுரையில் அமைய உள்ள மேம்படுத்தப்பட்ட சிறப்பு மருத்துவமனை இறுதி வடிவம் பெறும்.

     வரும் 2 மாதங்களில் மருத்துவமனைக்கான பணிகள் தொடங்கும். பின்னர் 24 மாதங்களில் பணிகள் நிறைவடைந்து மருத்துவமனை செயல்படும்.

    சிறுநீரகம், நரம்பியல், இதயம், குடல்வால் மற்றும் புற்றுநோய் என குறிப்பிட்ட துறைகள் அறுவைச் சிகிச்சை பிரிவுடன் நவீன சாதனங்கள் அமைக்கப்பட்டு செயல்படும். புதிய மேம்படுத்தப்பட்ட மருத்துமனையானது மேம்பாலம் மூலம் அண்ணா பஸ் நிலைய விரிவாக்கக் கட்டடத்துடன் இணைக்கப்படும்.

   மதுரை பகுதி மக்கள் தீவிர சிகிச்சைக்கு சென்னை, பெங்களூரு   சென்று வருகின்றனர். ஆகவே ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மேம்படுத்தப்பட்ட மருத்துவமனை செயல்படும் என்றார்.

     ஆய்வின்போது மாநில மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் வம்சதாரா மற்றும் மதுரை அரசு மருத்துவமனை டீன் டாக்டர் என். மோகன், மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளர் (பொறுப்பு) டாக்டர் வடிவேல்முருகன், நிலைய மருத்துவ அதிகாரிகள் டாக்டர் பிரகதீஸ்வரன், திருவாய்மொழிப்பெருமாள் உள்ளிட்டோர்  இருந்தனர்.

   மேம்படுத்தப்பட்ட மருத்துவமனையின் மேல்தளத்தில் ஹெலிகாப்டர் இறங்கும்  வசதியும் அமைக்கப்பட உள்ளதாக மருத்துவர் வட்டாரம் தெரிவித்தது.

   அணுக்கதிர் வீச்சு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், புதிய மேம்படுத்தப்பட்ட மருத்துவமனை நவீன முறையில் அமைய உள்ளதாகவும்  மருத்துவர்கள் கூறினர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai