அனுமதியின்றி செயல்பட்ட காப்பகத்துக்கு "சீல்'

மதுரை அருகே அனுமதியின்றி செயல்பட்ட குழந்தைகள் காப்பகம், மாவட்ட நிர்வாகத்தால் சீல் வைக்கப்பட்டது. அங்கிருந்த 53 குழந்தைகள் மீட்கப்பட்டு, பிற காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
Published on
Updated on
1 min read

மதுரை அருகே அனுமதியின்றி செயல்பட்ட குழந்தைகள் காப்பகம், மாவட்ட நிர்வாகத்தால் சீல் வைக்கப்பட்டது. அங்கிருந்த 53 குழந்தைகள் மீட்கப்பட்டு, பிற காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் பதிவு பெறாத குழந்தைகள் காப்பகங்களை மூட மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் உத்தரவிட்டார். இதன்பேரில் மதுரையை அடுத்த கடச்சனேந்தல் பொம்மி நகரில் அனுமதி பெறாமல், தனியார் குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வந்தது கண்டறியப்பட்டது. அந்த காப்பகத்தில் குழந்தைகள் காப்பகங்களுக்குரிய எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை. மேலும், ஒரேயொரு ஆஸ்பெஸ்டாஸ் அறையில் 53 குழந்தைகள் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

மாவட்ட சமூக நல அலுவலர் ஆனந்தவள்ளி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் விஜயலெட்சுமி, காவல் துறையின் ஆள்கடத்தல் தடுப்புப் பிரிவினர், சைல்ட் லைன் அமைப்பினர், ஒத்தக்கடை காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் கணேசன் ஆகியோர் கொண்ட குழுவினர் இந்த குழந்தைகள் காப்பகத்தில் புதன்கிழமை இரவு ஆய்வு மேற்கொண்டனர்.

அனுமதி பெறாமல் இயங்கியதோடு, குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து அந்த காப்பகத்துக்கு சீல் வைக்கப்பட்டது.

அங்கிருந்த 53 குழந்தைகள் மீட்கப்பட்டனர். அவர்களில் பெற்றோர் இருக்கும் குழந்தைகள், அவரவர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். மற்ற ஆதரவற்ற குழந்தைகள் அனைவரும், அரசின் அனுமதி பெற்ற பிற காப்பகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மதுரை மாவட்டத்தில் 52 குழந்தைகள் காப்பகங்கள் செயல்படுகின்றன. இவற்றில் இன்னும் 18 குழந்தைகள் காப்பகங்கள் அனுமதி பெறாமல் இருக்கின்றன. இந்த காப்பகங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க உள்ளதாக ஆய்வுக் குழுவினர் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com