மதுரை மாவட்டம் சமயநல்லூர் வைகை ரோட்டில் குடியிருப்பவர் தனுஷ்கோடி மகன் நாகராஜ். இவர் சமயநல்லூர் அக்ரஹாரத் தெருவில் தளவாட பொருள்கள் வாடகைக்கு கொடுக்கும் கடை நடத்திவருகிறார். புதன்கிழமை அதிகாலை இவரது கடையில் தீப்பிடித்து எரிந்து அங்கிருந்த தளவாடபொருள்கள், சைக்கிள் உள்ளிட்டவை சாம்பலாகின. இதன் மதிப்பு ரூ.1லட்சமாகும். இது குறித்து நாகராஜ் கொடுத்த புகாரின் பேரில் சமயநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருவெங்கட்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் நாகராஜிடம் தகராறு செய்துவிட்டு தலைமறைவாக இருந்த மதுரை பழங்காநத்தம் பசும்பொன்நகரைச் சேர்ந்த பிச்சைமுகமது மகன் பீர்முகமது(33) என்பவர் கடைக்கு தீவைத்ததாக தெரியவந்தது. நாகராஜிடம் பீர்முகமது சைக்கிள் எடுப்பது வழக்கமாம். சிலநாள்களுக்கு முன் வாடகைக்கு எடுத்துச்சென்ற சைக்கிளை பீர்முகமது தொலைத்துவிட்டாராம். இதுகுறித்து இருவருக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக தீவைத்ததாகவும் தெரியவந்தது. பீர்முகமதுவை சமயநல்லூர் போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.