மதுரை சிறையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மோத முயன்ற சம்பவத்தைத் தொடர்ந்து ஏற்கெனவே 12 கைதிகள் கோவைக்கு இடமாற்றப்பட்ட நிலையில், மேலும் 2 கைதிகள் வியாழக்கிழமை வெளியூருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
தேவேந்திர வேளாளர் கூட்டமைப்பைச் சேர்ந்த பசுபதிபாண்டியன் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டோர் மீது திண்டுக்கல் பகுதியில் வெடிகுண்டு வீசப்பட்டது. இந்த வழக்கில் அனுப்பானடியைச் சேர்ந்த ராமர் உள்ளிட்ட 4 பேர் தென்காசி நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்கள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டபோது, அனுப்பானடி பகுதியில் முத்துவிஜயன் கொலை வழக்கில் கைதாகி சிறையிலுள்ள முருகன் உள்ளிட்டோர் வாக்குவாதம் செய்து எச்சரித்து கூச்சலிட்டனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து கைதிகள் மோதலைத் தவிர்க்க ராமர் உள்ளிட்ட 12 பேர் மதுரையிலிருந்து கோவை சிறைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இந்தநிலையில், ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த அப்பளராஜா வேலூர் சிறைக்கும், அண்ணாமலை என்ற கைதியை கடலூர் சிறைக்கும் மாற்றி சிறைக் கண்காணிப்பாளர் அறிவுடைநம்பி உத்தரவிட்டார். இதையடுத்து இருவரும் வியாழக்கிழமை சம்பந்தப்பட்ட சிறைகளுக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டனர்.