ஒவ்வொரு மாவட்டத்தின் தேவைக்கேற்ப அண்ணா மேலாண்மை நிலையத்தால், அரசு அலுவலர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி வழங்கப்படும் என்று சென்னை அண்ணா மேலாண்மை நிலைய இயக்குநர் வெ.இறையன்பு கூறினார்.
அண்ணா மேலாண்மை நிலையத்தின் மதுரை மண்டல மையம் சார்பில், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த வருவாய்த் துறை அலுவலர்களுக்கு சட்ட மேலாண்மை குறித்த பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடத்தப்பட்டது. இதில் துணை ஆட்சியர்கள், வட்டாட்சியர்கள், துணை வட்டாட்சியர்கள் பங்கேற்றனர்.
இந்த பயிற்சி வகுப்பைத் துவக்கி வைத்த, அண்ணா மேலாண்மை நிலைய இயக்குநர் இறையன்பு செய்தியாளர்களிடம் கூறியது: அண்ணா மேலாண்மை நிலைய நிர்வாகத்தின்கீழ் ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் உள்ள குடிமைப் பணியாளர்கள் பயிற்சி நிலையம், குரூப் அ மற்றும் ஆ பிரிவு அலுவலர்களுக்கான பயிற்சி மையம், அகில இந்திய குடிமைப் பணி பயிற்சி மையம் ஆகியன செயல்பட்டு வருகின்றன. குடிமைப் பணி பயிற்சி மையத்துக்கு ரூ.10.14 கோடி செலவில் தமிழக முதல்வரால், புதிய கட்டடம் 2012 அக்டோபரில் திறந்து வைக்கப்பட்டது. அனைத்து வசதிகளுடன் கூடிய மையத்தில் 225 பேர் தங்கிப் பயிற்சி பெற வசதி இருக்கிறது. இம் மையம் துவங்கப்பட்டதில் இருந்து இந்த ஆண்டில் தான் அதிகபட்சமாக 57 பேர், குடிமைப் பணிக்கு தேர்வாகியிருக்கின்றனர்.
பவானிசாகர் பயிற்சி மையத்தில் இளநிலை உதவியாளர்கள், உதவியாளர்களுக்கு ஆதாரப் பயிற்சி அளிக்கப்படுகிறது. அதேபோல, குரூப் அ, ஆ பயிற்சி மையம் மூலம் பணியில் சேரும்போது ஆதாரப் பயிற்சி பெறுகின்றனர். அவர்களுக்கு அடுத்தகட்ட பயிற்சி அளிக்கும் வகையில் சேலம், திருச்சி, மதுரையில் மண்டல மையங்கள் நிறுவப்பட்டுள்ளன.
மதுரை மண்டல மையத்தில் மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் இடம்பெறுகின்றன. அந்தந்த மாவட்ட நிர்வாகத்தில் தேவைக்கேற்ப அலுவலர்களுக்குப் புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்படும். அண்ணா மேலாண்மை நிலையத்தால் 20 வகையான பயிற்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதைத்தவிர அந்தந்த மாவட்ட நிர்வாகங்களின் தேவைக்கேற்ப பயிற்சிகள் அளிக்கப்படும்.
சேலம் மாவட்டத்தில் ஜூன் 19 இல், நேர மேலாண்மை குறித்தும், ஜூன் 23, 24 ஆம் தேதிகளில் திருச்சி மாவட்டத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்தும் அலுவலர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அவரவர் பணி சார்ந்த பயிற்சி என்பதால் மிகுந்த ஆர்வத்துடன் அலுவலர்கள் பங்கேற்கின்றனர் என்றார்.
முன்னதாக, பயிற்சி வகுப்பில் பேசிய நீதிபதி கே.வெங்கட்ராமன், வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு வரும் மனுக்களில் ஆரம்ப கட்டத்திலேயே முடியும் - முடியாது என்பதைத் தெரிவித்துவிட்டால், நீதிமன்றங்களுக்கு வரும் பெரும்பாலான வழக்குகளைத் தவிர்க்க முடியும். குறிப்பாக, பட்டா மாறுதல் கோரி ஒருவர் விண்ணப்பிக்கும்போது அதற்கான சாத்தியக்கூறு இருக்கிறதா இல்லையா என்பதை குறிப்பிட்ட காலஅவகாசத்துக்குள் தெரிவிக்க முடியும். ஆனால், அதை வட்டாட்சியர்கள் நீண்டகாலத்துக்கு கிடப்பில்போட்டு, மனுதாரர் வழக்குத் தொடுக்கும் நிலைக்கு கொண்டு செல்லப்படுகிறது. அதேபோல, இடமாறுதல், இடைநீக்கம் போன்ற உத்தரவுகளை வழங்கும்போது முறையான, பொருத்தமான காரணங்களை உத்தரவில் குறிப்பிடத் தவறிவிடுகின்றனர். இதனால், நீதிமன்றங்களில் அந்த உத்தரவுகளை நீக்கம் செய்யப்படுகிறது என்றார்.
மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியன், மாவட்ட வருவாய் அலுவலர் லோ.சிற்றரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.