Enable Javscript for better performance
உலக அமைதியின் அடையாளம் மகாத்மா காந்தி: அமெரிக்க காந்தியவாதி கருத்து- Dinamani

சுடச்சுட

    

    உலக அமைதியின் அடையாளம் மகாத்மா காந்தி: அமெரிக்க காந்தியவாதி கருத்து

    Published on : 27th March 2014 03:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மகாத்மா காந்தியடிகள் உலக அமைதியின் அடையாளமாகத் திகழ்கிறார் என அமெரிக்க காந்திய அறக்கட்டளைத் தலைவர் சுபாஷ் ராஸ்தான் புகழாரம் சூட்டினார்.

     மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்ற காந்தி நினைவு சிறப்புச் சொற்பொழிவில் பங்கேற்ற அவர் முன்னதாக செய்தியாளர்களிடம் கூறியதாவது: அமெரிக்காவில் அட்லாண்டா மாநிலத்தில் மார்ட்டின் லூதர் கிங்கின் நினைவக வளாகத்தில் காந்தியடிகளின் முழு உருவச்சிலையும், அவரது கொள்கை பரப்பும் பிரிவும் அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 1 மில்லியன் மக்கள் அங்குவந்து செல்கின்றனர்.

      மார்ட்டின் லூதர் கிங்கின் பிறந்த வீடு உள்ள தெருவுக்குக் கூட காந்தியடிகள் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இருவரது கொள்கைகளும் வாழ்வுக்கு அவசியமாகும். அமெரிக்காவில் 35 இடங்களில் காந்தியின் திருவுருவச் சிலையும், 3 இடங்களில் அவரது நினைவு ஆய்வு மைய அறைகளும் உள்ளன.

      அமெரிக்காவில் கருப்பின மக்களுக்கும், கொரிய மக்களுக்கும் பிரச்னை ஏற்பட்டபோது, காந்திய அறக்கட்டளை தலையிட்டு அமைதியை ஏற்படுத்தியது. மோதலில் ஈடுபட்டோரை காந்தியின் திருவுருவச் சிலை பகுதிக்கு அழைத்துச்சென்றாலே அமைதி ஏற்பட்டுவிடும். ஆகவே காந்தியடிகள் அமைதியின் அடையாளமாகத் திகழ்கிறார்.

       அமெரிக்க பொருளாதாரக் கொள்கை என்பது நிலையற்றது. ஆகவேதான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சீன உற்பத்தியானது உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. தற்போது மீண்டும் அமெரிக்க உற்பத்தியானது தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.

    இந்தியாவைப் போலவே பலதரப்பட்டவர்களும் அமெரிக்காவில் வசிக்கின்றனர்.

      உலக அளவில் அமெரிக்காவை விட இந்தியாவே மிகப்பெரிய ஜனநாயக நாடாகும். தனிமனித உரிமையின் பிறப்பிடமாக இந்தியா உள்ளது.

     அமெரிக்காவில் சுதந்திரமடைந்து 150 ஆண்டுகளுக்கு பிறகுதான் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தது. ஆனால், சுதந்திரமடைந்ததும், இந்தியாவில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்துள்ளது.

    அமெரிக்க வாழ் குஜராத்தி, மலையாளிகள், தெலுங்கு மக்களுக்கு தேசிய வாழ்வுரிமை கிடைப்பதற்கு இந்திய அரசுகள் கவனம் செலுத்தவேண்டும் என்றார்.    பின்னர் நடைபெற்ற சிறப்புச் சொற்பொழி நிகழ்வுக்கு காந்தி அருங்காட்சியகச் செயலர் ம.பா.குருசாமி தலைமை வகித்தார்.

      காந்திகிராம கிராமிய பல்கலைக்கழக அரசியல் அறிவியல்துறையின் தலைவர் பேராசிரியர் வி.ரகுபதி தொடக்கவுரையாற்றினார்.

     காந்தி அருங்காட்சியக ஆராய்ச்சியாளர் எஸ்.ஜெயராஜ் வரவேற்றார்.

        சமூக ஆர்வலர் எம்.ஜே.பிரபாகர் மற்றும் காந்தி அருங்காட்சியக அலுவலர்கள் நந்தாராவ், நடராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அருங்காட்சியக உதவி ஆராய்ச்சியாளர் ஆர்.தேவதாஸ் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai