Enable Javscript for better performance
தூத்துக்குடி ஆயுதக்கப்பல் வழக்கில் 33 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடி ஆயுதக்கப்பல் வழக்கில் 33 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு

    By dn  |   Published on : 27th March 2014 02:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடி அருகே கடலில் பிடிபட்ட அமெரிக்க தனியார் ஆயுதக்கப்பல் தொடர்பான வழக்கில் 33 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

     கடந்த ஆண்டு அக்டோபரில் தூத்துக்குடி அருகே அமெரிக்க நாட்டு தனியார் கப்பல் ஆயுதங்களுடன் பிடிபட்டது. அதில் இருந்த கேப்டன் டுடினிக் வாலன்டைன் மற்றும் ஆயுதப் பாதுகாப்பு பொறுப்பு அதிகாரி பால் டேவிட் டென்னிஸ் டவர் உள்ளிட்ட 35 பேரும் பயங்கர ஆயுதங்களுடன் கடந்த அக்டோபர் 18-ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.

     இதுதொடர்பாக கியூபிரிவு போலீஸôர் வழக்குப்பதிந்து விசாரித்தனர். மேலும் கப்பலுக்கு டீஸல் கடத்தி அளித்ததாக முனித்தேவன் கைது செய்யப்பட்டார். டீஸலை கடலுக்குள் கடத்தியதாக வினோத் என்பவரைத் தேடி வந்தனர். அவர் முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனுச்செய்திருந்தார்.

      கைதானவர்கள் ஜாமீன் மனு பலமுறை தள்ளுபடி செய்தநிலையில், அவர்களது ஜாமீன் மனு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன் முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது வாதிட்ட அரசு வழக்குரைஞர், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் பல நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களை ஜாமீனில் விடுவித்தால், பிறகு விசாரணைக்கு கொண்டுவருவதில் சிக்கல் ஏற்படும் எனக்கூறினர்.

     வாதத்தைக் கேட்ட நீதிபதி, வழக்கில் சம்பந்தப்பட்டோரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டிருப்பதாலும், கடும் நிபந்தனை மூலம் சட்டத்தின் பிடியில் இருந்து குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தப்பிக்கமுடியாது என்பதாலும் 33 பேருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். கப்பல் கேப்டன் வாலன்டைன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

     ஜாமீன் பெற்ற 33 பேரும் ரூ.2 லட்சம் பிணைத்தொகையை தூத்துக்குடி முதலாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் செலுத்தியும், சென்னை மயிலாப்பூரில் தங்கி தினமும் காவல் நிலையத்தில் காலை, மாலையில் மறு உத்தரவு வரும் வரையில் கையெழுத்திடவும் நீதிபதி உத்தரவிட்டார்.

      வழக்கில் சம்பந்தப்பட்ட முனித்தேவனுக்கு ரூ.50ஆயிரம் பிணைத்தொகையும், தூத்துக்குடியில் தங்கி சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் தினமும் காலை, மாலை மறு உத்தரவு வரும் வரை ஆஜராகி கையெழுத்திடவும் உத்தரவிடப்பட்டது.

      வழக்கில் முன்ஜாமீன் கோரிய வினோத் ரூ.50 ஆயிரம் பிணைத்தொகை செலுத்தி தூத்துக்குடியில் தங்கி சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் மறு உத்தரவு வரும் வரை தினமும் காலை, மாலையில் கையெழுத்திடவும் நீதிபதி உத்தரவிட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai