Enable Javscript for better performance
அடிப்படை வசதிக்கு ஏங்கும் டிவிஎஸ் நகர் இ.பி.காலனி- Dinamani

சுடச்சுட

    

    அடிப்படை வசதிக்கு ஏங்கும் டிவிஎஸ் நகர் இ.பி.காலனி

    By மதுரை  |   Published on : 17th April 2015 03:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை டி.வி.எஸ் நகர் விரிவாக்கப் பகுதியான இ.பி.காலனி, சந்தோஷ் நகர் மக்கள் குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கின்றனர்.

      மதுரை மாநகராட்சி 92 ஆவது வார்டுக்கு உள்பட்ட இ.பி.காலனி, சந்தோஷ் நகர், அன்னை நகர், பாலாஜி நகர் ஆகிய பகுதிகளில் சுமார் 250க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அவனியாபுரம் நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் இருந்த இவை மதுரை மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்டபோது இணைக்கப்பட்டது.

     மதுரை நகரப் பகுதிகளில் டி.வி.எஸ் நகர் பகுதி வழியாக செல்லும் இவர்கள் குறிப்பிட்ட தூரத்திற்கு மேல் சாலை வசதியின்றி மண் சாலையில் செல்லவேண்டி உள்ளது.

     மேலும் மழை காலங்களில் இச்சாலை சேறும் சகதியுமாக உள்ளது. இச்சாலையை சீரமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் பல மாதங்களாக கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. 

     குடிநீர் வசதியில்லாததால் டி.வி.எஸ் நகர், ஜெய்ஹிந்துபுரம் பகுதிகளுக்கு சென்று தண்ணீர் எடுக்க வேண்டிய நிலை உள்ளது. லாரியில் கூட மாநகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்காத நிலையில், இப்பகுதி மக்கள் தனியார் லாரிகளையே நம்பி இருக்க வேண்டி உள்ளது.

     சாலைகளில் கழிவுநீர் செல்வது,  குப்பைத் தொட்டிகள் இல்லாததால் திறந்தவெளியில் குப்பைகள் கொட்டுவது என சுகாதாரமில்லாமல் தொற்று நோய்பரவும் அவலம் ஏற்பட்டுள்ளது. 10 நாள்களுக்கு ஒருமுறை தான் குப்பைகளை அள்ளுகின்றனர்.  மதுரை நகருக்கு மிக அருகாமையில் இருந்தும்கூட சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளில் எங்களது பகுதி பின்தங்கி இருக்கிறது என இப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

     இ.பி.காலனி, சந்தோஷ் நகர் செல்லும் பாதை ஏற்கனவே மிக மோசமானதாக உள்ளது. இதில் மாநகராட்சி குப்பை லாரிகளும் செல்வதால் சாலை குண்டும் குழியுமாக மாறிவிட்டது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

       இதுகுறித்து மாநகராட்சி பொறியியல் பிரிவு அதிகாரிகளிடம் கேட்டதற்கு: இ.பி.காலனி, சந்தோஷ் நகர் பகுதிகளில்  ஏற்கெனவே 3 சின்டெக்ஸ் தொட்டிகள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. விரைவில் இப்பகுதிகளில் பாதாளச் சாக்கடைப் பணிகளும் நடைபெறவுள்ளது என்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai