Enable Javscript for better performance
ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு குடும்பத்தினருடன் சேர்ந்த சிறுவன்- Dinamani

சுடச்சுட

    

    ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு குடும்பத்தினருடன் சேர்ந்த சிறுவன்

    By மதுரை  |   Published on : 17th April 2015 02:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஏழு ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்காக அழைத்துச் செல்லப்பட்ட சிறுவன், எங்கு இருக்கிறார் எனத் தெரியாத நிலையில் குழந்தைகள் நலக் குழுமம் அவர் மூலமாக குடும்பத்துடன் சேர்த்து வைக்கப்பட்டுள்ளார்.

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதக்குடியைச் சேர்ந்த கருப்பையா - நாகவள்ளி தம்பதியின் மகன் முருகன் (14). இவர் 3 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, அதேபகுதியைச் சேர்ந்த சிலர் ஆந்திர மாநிலத்துக்கு வேலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். குடும்ப சூழ்நிலை காரணமாக பெற்றோரும் சம்மதித்துவிட்டனர். ஆந்திரம் சென்ற சிறுவன் குறித்து அதன் பிறகு பெற்றோருக்குத் தகவல் கிடைக்கவில்லை.

    ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியில் பேக் தயாரிக்கும் நிறுவனத்தில் கொத்தடிமையாக வேலை செய்து வந்த முருகனை, அம்மாநில தொழிலாளர் துறையினர் அண்மையில் மீட்டு தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட சிறப்புப் பள்ளியில் சேர்த்துள்ளனர். அப்போது தனது சொந்த ஊர் மதுரை அருகே உள்ள கமுதக்குடி என்று தெரிவித்துள்ளார். அதையடுத்து அச்சிறுவனை பெற்றோரிடம் சேர்ப்பதற்காக, நெல்லூர் மாவட்ட குழந்தைகள் நலக் குழுமத்தினர், மதுரை மாவட்ட குழந்தை நலக் குழுமத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

      இதுகுறித்து மதுரை மாவட்ட குழந்தைகள் நலக் குழுமத் தலைவர் ஜிம்ஜேசுதாஸ் கூறியது: எட்டு வயதில் ஆந்திர மாநிலம் சென்ற முருகன் இப்போது தமிழ் மறந்துவிட்டது. தெலுங்கில் தான் பேசுகிறார். அவரை மதுரைக்கு அழைத்து வந்து மொழிபெயர்ப்பாளர் மூலம் பேசியபோது ஊர் மற்றும் தாயார் பெயரை மட்டுமே கூறினார். இதன் மூலம் அவரது பெற்றோரைக் கண்டுபிடிக்க முடிந்தது. இல்லையெனில் பெற்றோரைக் கண்டுபிடிக்க இயலாமல் போயிருக்கும்.

    முருகனை அழைத்துச் சென்றவர்கள், அவர் தங்களிடம் இருந்து எங்கோ சென்றுவிட்டார், கண்டுபிடிக்க முடியவில்லையென்று பெற்றோரிடம் கூறிவிட்டனர். வசதிபடைத்தவர்கள் என்பதால் அவர்கள் மீது புகார் கொடுக்கவில்லை என்று முருகனின் பெற்றோர் தெரிவித்தனர்.

     ராமநாதபுரம் மாவட்ட குழந்தை நலக் குழு மூலமாக முருகனின் சொந்த கிராமத்தில் விசாரணை நடத்தினோம். அவரது பெற்றோர் குடும்ப அட்டை மற்றும் பழைய புகைப்படங்கள் மூலமாக உறுதி செய்து பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளோம் என்றார்.

    மதுரை முத்துப்பட்டியில் உள்ள விடியல் சமூக மையத்தில் இந்த உணர்ச்சிகரமான சந்திப்பு வியாழக்கிழமை நடைபெற்றது. ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு தங்களது மகன் கிடைத்த மகிழ்ச்சியில் முருகனின் குடும்பத்தினர் ஆனந்தக் கண்ணீர் விட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai