Enable Javscript for better performance
மதுரையில் ஒரே பிரசவத்தில் எடை குறைவாக பிறந்த 3 குழந்தைகள் நவீன சிகிச்சையால் உயிர் பிழைப்பு- Dinamani

சுடச்சுட

    

    மதுரையில் ஒரே பிரசவத்தில் எடை குறைவாக பிறந்த 3 குழந்தைகள் நவீன சிகிச்சையால் உயிர் பிழைப்பு

    By மதுரை  |   Published on : 17th April 2015 03:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரையில் ஒரே பிரசவத்தில் எடை குறைவாக பிறந்த 3 குழந்தைகள் நவீன சிகிச்சை மூலம் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

     இதுகுறித்து மதுரை வடமலையான் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் மருத்துவர் வ.புகழகிரி மற்றும் மருத்துவமனை மருத்துவர்கள் ஜலஜா அசோக், வினோத் ஆகியோர் நிருபர்களிடம் வியாழக்கிழமை கூறியது:

     மதுரையைச் சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் கோவர்த்தன். இவரது மனைவி ஜோதி. செயற்கை கருத்தரித்தல் முறையில் ஜோதி கர்ப்பிணியானார். அவருக்கு ரத்த அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகள் இருந்தன. அவர் ஆறரை மாத கர்ப்பத்தில் வடமலையான் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். அவரைப் பரிசோதித்தபோது கர்ப்பத்தில் 3 குழந்தைகள் இருப்பது தெரியவந்தது. அவரது உடல் நலம் மற்றும் குழந்தைகள் நலன் கருதி 28-ஆவது வாரத்திலேயே ஜோதிக்கு குறைப்பிரசவமாக அறுவை சிகிச்சை மூலம் 2014 டிசம்பரில் குழந்தை பிறந்தது.

     இரு பெண் குழந்தைகள் தலா 1.05 கிலோ மற்றும் 500 கிராம் எடையில் இருந்தன.  ஆண் குழந்தை ஒன்று 540 கிராம் எடையில் இருந்தது. இக் குழந்தைகளே நாட்டில் மிக மிக எடை குறைந்தவையாக இருப்பதும் தெரியவந்தது. பொதுவாக நம் நாட்டில் குறைந்தது 2.8 கிலோ எடையில் குழந்தைகள் பிறக்கும். ஆனால், இக்குழந்தைகள் மிகவும் எடை குறைவாகவே இருந்தன.

     மிக மிக எடை குறைந்த உள்ளங்கைகளில் வைக்கும் அளவுள்ள குழந்தைகளை கருப்பையில் இருப்பதுபோல நவீன சாதனங்கள் மூலம் தொடர்ந்து சிகிச்சைக்கு உட்படுத்தினோம். இதனால், குழந்தைகளின் எடை படிப்படியாக கூடியது.

     கடந்த மார்ச் மாதம் மருத்துவமனையிலிருந்து குழந்தைகள் வீட்டிற்கு செல்லும்போது முதல் பெண் குழந்தை 2.480 கிலோவும், 2-வது ஆண் குழந்தை 1.159 கிலோவும் 3-வது பெண் குழந்தை 1.08 கிலோவும் இருந்தன. இப்போது அக்குழந்தைகள் எடை முறையே 3.168 கிலோ, 1.320 கிலோ 1.470 கிலோ ஆக அதிகரித்துள்ளது.

     சர்வதேச அளவில் ஆண்டுக்கு 80 லட்சம் எடை குறைவான குழந்தைகள் பிறக்கின்றன. அதில்  நம்நாட்டில் 40 சதவிகிதம் குழந்தை எடை குறைவாகவே உள்ளன. எடை குறைந்த குழந்தைகள் முழுமையாக உடல் நலம் மேம்படுவது அரிதானது. ஆகவே நவீன சிகிச்சைகள் மூலம் இந்த குழந்தைகள் காப்பாற்றப்பட்டுள்ளன என்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai