மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை: ஏப்ரல் 22 இல் மத்திய சிறப்புக் குழு ஆய்வு

மதுரை மாவட்டம், தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கலாமா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள, வரும் 22 ஆம் தேதி (புதன்கிழமை) புது தில்லியிலிருந்து மத்திய சுகாதார சிறப்புக் குழுவினர் வருகை தருகின்றனர்.

மதுரை மாவட்டம், தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கலாமா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள, வரும் 22 ஆம் தேதி (புதன்கிழமை) புது தில்லியிலிருந்து மத்திய சுகாதார சிறப்புக் குழுவினர் வருகை தருகின்றனர்.

கடந்த 2009 இல், மதுரை தோப்பூரில் சுமார் ரூ. 150 கோடியில் புதுதில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ ஆய்வு மையம் (எய்ம்ஸ்) கிளை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதற்காக, சுமார் 250 ஏக்கர் அரசு நிலம் ஒதுக்கப்பட்டு, பூமி பூஜையும் நடைபெற்றது.

ஆனால், அப்போதைய மத்திய அரசின் சுகாதாரத் துறை எய்ம்ஸ் கிளை அமைக்க முடியாது எனவும், அரசு ராஜாஜி மருத்துவமனையின் விரிவாக்கக் கட்டடமாக சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அமைக்கலாம் எனவும் கூறி, ரூ. 150 கோடி நிதி அளித்தது.

அரசு மருத்துவமனைக்கான விரிவாக்கக் கட்டடத்தை தோப்பூரில் கட்ட மருத்துவர்கள் சங்கம் எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து, மதுரை மருத்துவக் கல்லூரி மைதானத்தின் ஒரு பகுதியில் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு, மத்திய பாஜக அரசின் சார்பில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில், மதுரை தோப்பூர், கோவை, புதுக்கோட்டை, செங்கல்பட்டு ஆகிய இடங்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளன.

மதுரையில் ஆய்வு: எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் இடத்தை ஆய்வு செய்வதற்காக மத்திய சுகாதாரச் செயலர் தலைமையிலான 3 பேர் கொண்ட குழுவினர், மதுரைக்கு ஏப்ரல் 22 ஆம் தேதி வருகை தருகின்றனர் என்பதால், தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை, மதுரை மாவட்ட ஆட்சியர் இல. சுப்பிரமணியன், அரசு மருத்துவமனை டீன் டாக்டர் ரேவதி கயிலைராஜன் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டனர்.

இது குறித்து, டீன் டாக்டர் ரேவதி கயிலைராஜனிடம் கேட்டபோது, மதுரையில் விமானப் போக்குவரத்து வசதி, அரசு இடம் என அனைத்து அம்சங்களும் சாதகமாக உள்ளன. எனவே, தென்மாவட்ட மக்கள் பயனடையும் வகையில், எய்ம்ஸ் கிளை அமைய அனைத்துத் தரப்பிலும் முயற்சித்து வருகிறோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com