ஆஸ்திரேலியாவில் தமிழ்ச்சொல் வளம் பெருக்கும் வானொலிகள்

ஆஸ்திரேலியாவில் தமிழ் கற்றுக்கொள்ள வானொலிகள் பெரிதும் துணையாக இருக்கின்றன என மதுரையில் நடந்த கலந்துரையாடலில்  தெரிவிக்கப்பட்டது.

ஆஸ்திரேலியாவில் தமிழ் கற்றுக்கொள்ள வானொலிகள் பெரிதும் துணையாக இருக்கின்றன என மதுரையில் நடந்த கலந்துரையாடலில்  தெரிவிக்கப்பட்டது.

  மதுரை அண்ணாநகரில் உள்ள தமிழ்ச்சங்க அலுவலகத்தில் 2 ஆவது சிறப்பு கலந்துரையாடல் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், ஆஸ்திரேலியா பாலர் மலர் தமிழ்ப் பள்ளியின் ஆலோசகர் அன்புஜெயா பேசியது: ஆஸ்திரேலியாவில் சிட்னி, மெல்பேர்ன், அடிலெய்டு போன்ற நகரங்களில் தமிழ் அமைப்புகள், தமிழ்ச் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. அங்கு 24 மணி நேரமும் ஒலிபரப்பாகும் தமிழ் வானொலிகள் உள்ளன. பன்மொழிச் சூழலில் வாழும் தமிழ்க் குழந்தைகள் தமிழ்மொழியில் சொல்வளம் பெற இத்தகைய வானொலிகள் பெரும் பங்காற்றுகின்றன. தமிழ் ஓசை, கலப்பை, தென்றல், மெல்லினம் போன்ற அச்சு இதழ்களும் ஆஸ்திரேலியாவில் வெளி வருகின்றன. தமிழ்க் கல்வியினைப் பொறுத்தவரை தமிழ் அமைப்புகள் சில சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழைக் கற்பிக்கின்றன என்றார்.

 பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் தமிழகப் பேராசிரியர் பெஞ்சமின் லெபோ: பிரெஞ்சுப் பாதிரியார்கள் சமயத்தைப் பரப்புவதற்காக இந்தியாவிற்கு வந்தாலும் தமிழ்மொழியையும் பரப்பினார்கள். பல ஓலைச்சுவடிகளை பிரான்ஸிற்குக் கொண்டு சென்று நூல்களாகப் பதிப்பித்தார்கள்.

 பிரான்ஸில் தற்போது தமிழ் அமைப்புகள், தமிழ்க் கழகங்களைத் தோற்றுவித்து அதன்மூலம் தமிழ்மொழியைத் தக்கவைக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றன. பிரெஞ்சு மொழியின் பல சொற்களுக்கான வேர்ச் சொல் தமிழ்மொழியில் உள்ளது. பிழையின்றித் தமிழ்மொழியை எழுதவும், பேசவும் வேண்டும் என்றார்.

 உலகத் தமிழ்ச் சங்கத்தின் தனி அலுவலர் க.பசும்பொன் வரவேற்றார். அமெரிக்காவின் தமிழ் உலகம் அறக்கட்டளையின் ஆலோசகர் ஆல்பர்ட், தமிழ் அறிஞர்கள், தமிழ் அமைப்பினர், கல்லூரிப் பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com