Enable Javscript for better performance
மதுரை அருகே 4 பெண் உள்பட 5 பேர் கொலை ராணுவவீரர் வெறிச்செயல்- Dinamani

சுடச்சுட

    

    மதுரை அருகே 4 பெண் உள்பட 5 பேர் கொலை ராணுவவீரர் வெறிச்செயல்

    By மதுரை  |   Published on : 27th January 2015 05:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை அருகே குடும்பத்தகராறில் ராணுவ வீரர் தனது மாமனார், மாமியார் உள்ளிட்ட 5 பேரை வெட்டி திங்கள்கிழமை இரவு கொலை செய்தார். மனைவியைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார்.

    மதுரை மாவட்டம் பேரையூர் பகுதி நாகையாபுரம் போலீஸ் சரகத்துக்கு உள்பட்டது ஏ.தொட்டியபட்டி. இங்கு வசிப்பவர் பொன் ராமலிங்கம். ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவரது மகன்கள் கமலக்கண்ணன் (38). ராணுவ வீரர். பரமசுந்தர் (28). பட்டதாரி. கமலக்கண்ணனுக்கும் மங்கள்ரேவைச் சேர்ந்த சின்னச்சாமி மகள் கோமதி (38) -க்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

    திருமணமாகி 6 மாதங்களிலேயே கருத்து வேறுபாட்டால் கணவரை கோமதி பிரிந்து தந்தை சின்னச்சாமி வீட்டிற்கு வந்துவிட்டாராம். இதையடுத்து விவகாரத்து வழக்கும் நடந்துவருகிறதாம். சமீபத்தில்தான் விடுமுறையில் கமலக்கண்ணன் ஊருக்கு வந்துள்ளார்.

    இந்தநிலையில், திங்கள் மாலையில் ஏ.தொட்டியபட்டியில் ராமர் என்பவரது மகளுக்கு விழுப்புரத்தைச் சேர்ந்த பொன்னையா என்பவரது பேரனுக்கு திருமணம் பேசி நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அதற்காக மங்கள்ரேவிலிருந்து சின்னச்சாமி, தனது மனைவி ராமுத்தாய் (56), மகள்கள் கோமதி (28), கோட்டைபட்டியில் திருமணம் செய்து தந்த பாக்கியலட்சுமி (37), கடைசி மகள் வனரோஜா (23) ஆகியோருடன் வந்துள்ளார்.

    நிச்சயதார்த்தத்தின் போது கமலக்கண்ணனின் சகோதரி சின்னச்சாமி தரப்பினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். உடனே அங்கிருந்தவர்கள் இருதரப்பினரையும் சமரசம் செய்துள்ளனர். இதையடுத்து சின்னச்சாமி தனது மனைவி, மகள்களுடன் ஊருக்குச் செல்வதற்காக ஏ.தொட்டியபட்டி பஸ் நிறுத்தத்துக்கு வந்துள்ளார்.

    அப்போது அங்கு வந்த கமலக்கண்ணனும், அவரது சகோதரர் பரமசுந்தரும் வந்து சின்னசாமியிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். அப்போது திடீரென இருவரும் தாங்கள் வைத்திருந்த அரிவாளால் சின்னச்சாமி தரப்பினரை வெட்டியுள்ளனர். அதைத் தடுக்க முயன்ற கோமதியை கமலக்கண்ணன் சிறிய துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

    இச்சம்பவத்தில் சின்னச்சாமி, அவரது மனைவி ராமுத்தாய், மகள்கள் கோமதி, பாக்கியலட்சுமி, வனரோஜா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    சம்பவத்தை அடுத்து கிராமத்தினர் கமலக்கண்ணன், பரமசுந்தரை பிடிக்க முயன்றனர். உடனே கமலக்கண்ணன் தான் வைத்திருந்த துப்பாக்கியால் வானத்தை நோக்கிச் சுட்டுவிட்டு தப்பியோடிவிட்டார்.

    சம்பவம் கேள்விப்பட்டதும் மதுரை ஊரகக் காவல் கண்காணிப்பாளர் விஜயேந்திரபிதாரி உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இறந்த 5 பேர் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

    சரண்: மனைவி, மாமனார் உள்ளிட்ட 5 பேரைக் கொன்றதாகக் கூறப்படும் ராணுவவீரர் கமலக்கண்ணனும், பரமசுந்தரும் நாகையாபுரம் காவல் நிலையத்தில் சரணடைந்ததாகவும், தீவிர விசாரணை நடத்தப்படுவதாகவும் போலீஸார் கூறினர்.

    கடந்த புதன் (ஜன.21-ம் தேதி) குடும்பத்தகராறில் நாகையாபுரம் காவல் நிலையத்தில் பெண் போலீஸ் கருப்பாயி தனக்குத்தானே சுட்டு தற்கொலை செய்தது குறிப்பிடத்தக்கது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai