Enable Javscript for better performance
மதுரை: குடியரசு தின கொடியேற்றுவிழா ரூ.80 லட்சம் மதிப்பு நலத்திட்டம் வழங்கல்- Dinamani

சுடச்சுட

    

    மதுரை: குடியரசு தின கொடியேற்றுவிழா ரூ.80 லட்சம் மதிப்பு நலத்திட்டம் வழங்கல்

    By மதுரை  |   Published on : 27th January 2015 05:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் 148 பயனாளிகளுக்கு ரூ.80,34,374 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    மதுரை ஆயுதப்படை மைதானத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற 66 ஆவது குடியரசு தினவிழாவில் ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் தேசிய கொடியினை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதில் ஊரகக் காவல் கண்காணிப்பாளர் விஜயேந்திர பிதாரி உடனிருந்தார். அணிவகுப்பில் காவல்துறை, ஊர்க்காவல்படை, தீயணைப்புத்துறை மற்றும் தேசிய மாணவர் படையினரின் அணிவகுப்பும் நடந்தது.

    நிகழ்ச்சியில் நடப்பு ஆண்டில் காவல்துறையில் சிறப்பாக சேவை செய்த 89 தலைமை காவலர்களுக்கு தமிழக முதல்வரின் காவல் பதக்கம் வழங்கப்பட்டது. பின்பு சுதந்திர போராட்டத் தியாகிகளுக்கு ஆட்சியர் பொன்னாடை அணிவித்தார்.

    வருவாய்த்துறை சார்பில் முதலமைச்சர் பொது நிவாரண நிதி திட்டத்தின்கீழ் 4 பேருக்கு ரூ.85000, நலிந்தோர்க்கு உதவித்தொகையாக ரூ.60,000 காசோலையும், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் 2 பேருக்கு ரூ.3200 மதிப்பிலான மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரமும், ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 15 பேருக்கு ரூ.31,50,000 பசுமை வீடுகள்(2014- 15) உள்ளிட்ட நலத்திட்டங்களை ஆட்சியர் வழங்கினார்.

    மேலும் தாட்கோ சார்பில் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் 7 பேருக்கு ரூ.14,00,588 நலத்திட்டங்களையும், தொழிலாளர் அலுவலர் அலுவலகம் சார்பில் ரூ.1,75,000 மதிப்பில் இயற்கை மரணம் மற்றும் ஓய்வூதியம் 15 பேருக்கும், சமூகநலத் துறை சார்பில் ஆதரவற்ற பெண் திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் 11 பேருக்கு ரூ.4,75,000, கலப்பு திருமணத் திட்டத்தின் கீழ் 15 பேருக்கு ரூ.7,50,000, ஏழை பெண்கள் திருமணத் திட்டத்தின் கீழ் 35 பேருக்கு ரூ.17,50,000, முன்னாள் படைவீரர் நலத்துறையின் கீழ் 5 பேருக்கு இயற்கை மரணம் மற்றும் ஓய்வூதியம் ரூ.1,25,000, வேளாண்மைத் துறையின் சார்பில் 2 பேருக்கு தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.1786 மதிப்பிலான நலத்திட்டங்களையும், வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை(ஏடிஎம்ஏ)மூலம் 3 பேருக்கு ரூ.30,000 மதிப்பிலான காசோலையாக வழங்கப்பட்டன.

    பின்பு தோட்டக்கலைத்துறை சார்பில் 2 பேருக்கு ரூ.25,600, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் பாதுகாப்புத்துறை சார்பில் 26 பேருக்கு புதிய குடும்ப அட்டைகள் என 148 பயனாளிகளுக்கு ரூ.80,34,374 மதிப்பிலான நலத்திட்டங்களை ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் வழங்கினார்.

    மேலும் மதுரை மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 118 பேருக்கு விருது மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    தொடர்ந்து செளராஷ்டிரா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, புனிதலூகாஸ் மேல்நிலைப்பள்ளி, சீதாலெட்சுமி மகளிர் மேல்நிலைப்பள்ளி, யாதவா கல்லூரி, டோக் பெருமாட்டி கல்லூரி மற்றும் திருவேடகம் - விவேகானந்தா கல்லூரி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. கலைநிகழ்ச்சியில் பங்குபெற்ற அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டன.

    குடியரசு தின விழாவில் தென்மண்டல காவல்துறை தலைவர் அபய்குமார்சிங், துணைத் தலைவர் ஆனந்தகுமார்சோமானி, மாநகர காவல்துறை ஆணையர் சைலேஷ்குமார்யாதவ், ஊரக காவல் கண்காணிப்பாளர் விஜயேந்திரபிதாரி, மாநகர காவல் துணைஆணையாளர் சமந்த் ரோகன் ராஜேந்திரா, மாவட்ட வருவாய் அலுவலர் கூ.வேலுச்சாமி, துணை ஆணையாளர் உமையாள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஆறுமுகநயினார், மதுரை வருவாய் கோட்டாட்சியர் செந்தில் குமாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai