Enable Javscript for better performance
ஐஎன்டி குறியீடுடன் வாகன பதிவு எண் பலகை: மதுரையில் 400 பேரிடம் அபராதம் வசூல்- Dinamani

சுடச்சுட

    

    ஐஎன்டி குறியீடுடன் வாகன பதிவு எண் பலகை: மதுரையில் 400 பேரிடம் அபராதம் வசூல்

    By மதுரை  |   Published on : 28th January 2015 05:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மோட்டார் வாகன விதிகளை மீறி, ஐஎன்டி (ஐசஈ) என்ற எழுத்துக்கள் குறிப்பிடப்பட்டிருந்த பதிவு எண் பலகைகளைப் பயன்படுத்திய 400 வாகன உரிமையாளர்களுக்கு போலீஸார் அபராதம் விதித்துள்ளனர்.

    மத்திய மோட்டார் வாகன விதி 50 மற்றும் 51-ன்படி வாகன பதிவு எண் பலகை,  அதில் இடம்பெறக் கூடிய ஆங்கில எழுத்துகள், எண்களின் அளவீடுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என வரையறுக்கப்பட்டுள்ளன. இதன்படி, பதிவு எண் பலகையில் வேறெந்த குறியீடுகளோ, எழுத்துக்களோ இடம்பெற அனுமதியில்லை. அவ்வாறு இடம்பெற்றால் அத்தகைய வாகனத்தின் உரிமையாளர் மீது மோட்டார் வாகனச் சட்டத்தின்படி வழக்குப்பதிவு செய்ய முடியும்.

    சமீப காலமாக கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் ஐஎன்டி என்ற எழுத்துக்கள் குறிப்பிட்ட பதிவு எண் பலகைகள் காணப்படுகின்றன. வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்வோர் சிலர் இத்தகைய பலகைகள் தான் இடம்பெற வேண்டும் என வாகன உரிமையாளர்களிடம் விற்பனை செய்து வருவதாகத் தெரியவந்துள்ளது. விதிகளை மீறிய இத்தகைய வாகன பதிவு எண் பலகைகள் அனுமதிக்கப்படக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

    உயர்நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக, ஐஎன்டி எனக் குறிப்பிடப்பட்ட பதிவு எண் பலகைகள் கொண்ட வாகனங்களின் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. மதுரை மாநகரப் பகுதியில் மட்டும் கடந்த ஒரு வாரத்தில் 400 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, வாகன உரிமையாளர்களிடம் தலா ரூ.100 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தகைய பதிவு எண் பலகைகள் விற்பனை செய்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்று போக்குவரத்துப் பிரிவு போலீஸார் தெரிவித்தனர்.

    அவர்கள் மேலும் கூறியது: வாகன உரிமையாளர்கள் பெயர், முகவரி, ஓட்டுநர் உரிம விவரம், ஆர்.சி. புத்தகம் ஆகிய விவரங்களை கணினி சிப் ஆகக் கொண்ட நவீன பதிவு எண் பலகைகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இந்த நடவடிக்கை மத்திய அரசின் பரிசீலனையில் இருந்து வருகிறது. இந்நிலையில், வாகனங்களின் உதிரி பாகங்கள் விற்பனையாளர்கள் சிலர், அத்தகைய நவீன பதிவு எண் பலகையைப் போன்ற மாதிரியை புழக்கத்தில் விட்டுள்ளனர். இதற்கு அனுமதி கிடையாது என்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai