Enable Javscript for better performance
சதுரகிரியில் அணில்கள் வேட்டை: 6 பாதைகளை மூடக் கோரி வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    சதுரகிரியில் அணில்கள் வேட்டை: 6 பாதைகளை மூடக் கோரி வழக்கு

    By மதுரை  |   Published on : 28th January 2015 12:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை ,ஜன. 27: சதுரகிரி மலை சரணாலயத்தில் சாம்பல் நிற அணில்கள் வேட்டையாடப்படுவதால் கோயிலுக்குச் செல்லும் 6 பாதைகளை மூடக்கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில்  மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மனுவுக்கு தமிழக தலைமை வனப் பாதுகாவலர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

     விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த எம்.எஸ்.முருகன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன், வி.எஸ்.ரவி ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வாறு உத்தரவிட்டது.

     மனு விவரம்: விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி மலையில் சாம்பல் நிற அணில்களின் சரணாலயம் 1988 இல் உருவாக்கப்பட்டது. 485 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் இந்த சரணாலயம் உள்ளது. பெரியாறு புலிகள் சரணாலயத்தின் தொடர்ச்சியாகவும் இந்த சரணாலயம் இடம் பெற்றுள்ளது. இங்கு அபூர்வமான சாம்பல் நிற அணில்கள் மட்டுமல்லாமல், 18 வகையான ஊர்ந்து செல்லும் உயிரினங்களும், 56 வகையான வண்ணத்துப் பூச்சிகளும் வாழ்கின்றன.

     இம்மலையில் உள்ள சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு ஆடி, தை அமாவாசை மற்றும் பௌர்ணமி நாள்களில் பெருந்திரளான பக்தர்கள் செல்கின்றனர். கோயிலுக்கு தானிப்பாறை வழியாகச் செல்லவேண்டும். இது தவிர 6 மாற்றுப் பாதைகளில் செல்லும் சிலர் வழியில் விலங்குகளை வேட்டையாடுகின்றனர். மேலும் இப்பாதைகளில் முறையான அனுமதி பெறாமல் கட்டப்பட்ட 30 அன்னதான மண்டபங்களில் முகாமிட்டு சமைக்கின்றனர். இதனால் சரணாயலம் அழியும் ஆபத்து உள்ளது.  எனவே சரணாலயத்தை பாதுகாக்க ஏதுவாக, 6 மாற்றப்பாதைகளை மூடவும் அனுமதியற்ற மண்டபங்களை அகற்றவும் கோரி 2014 செப்.27ல் அரசுக்கு மனு அனுப்பினேன். ஆனால் பதில் இல்லை. எனவே அரசுக்கு இது தொடர்பாக உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டு உள்ளது.

     இம்மனு நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன், வி.எஸ்.ரவி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு தமிழக தலைமை வனப்பாதுகாவலர் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை பிப்.7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai