Enable Javscript for better performance
தமிழகத்தில் \\\"லோக் ஆயுக்த\\\' ஏற்படுத்தக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு- Dinamani

சுடச்சுட

    

    தமிழகத்தில் "லோக் ஆயுக்த' ஏற்படுத்தக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு

    By மதுரை  |   Published on : 28th January 2015 03:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை,  ஜன.  27:   தமிழகத்தில் "லோக் ஆயுக்த' அமைப்பை ஏற்படுத்தக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் செவ்வாய்க்கிழமை மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த வழக்குரைஞர் பி. ஸ்டாலின் தாக்கல் செய்துள்ள மனு விவரம்:  அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க "லோக் ஆயுக்த'அமைப்பை மாநிலங்கள் உருவாக்குவதற்கான சட்டம் நாடாளுமன்றத்தில் 2013 இல் நிறைவேற்றப்பட்டது. 2014 ஜனவரி 1 முதல் இச்சட்டம் அமலுக்கு வந்துள்ளது. சட்டம் நிறைவேற்றப்பட்டு ஓராண்டில் மாநிலங்கள் "லோக் ஆயுக்த' அமைப்பை ஏற்படுத்த வேண்டும். ஆனால் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டு பல மாதங்கள் ஆன போதும் தமிழகத்தில் "லோக் ஆயுக்தா' அமைக்க எந்த நடவடிக்கையும் அரசு மேற்கொள்ளவில்லை.

     தமிழகத்தில் பல்வேறு ஊழல் முறைகேடுகளில் முன்னாள், இன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள், அதிகாரிகள் தொடர்பு இருப்பதாக புகார்கள் கூறப்பட்டுள்ளன. ஆனால் "லோக் ஆயுக்த' அமைப்பு இல்லாததால் மக்களின் வரிப்பணம் முறைகேடாக தனிநபர் கைகளுக்குச் செல்கிறது. ஏற்கெனவே அமலில் உள்ள சட்டங்களால் உயர்நிலையில் இருப்பவர்களை தண்டிக்க முடியவில்லை. இதனால் தமிழகத்தில் "லோக் ஆயுக்த' அமைப்பை உடனடியாக நிறுவ வேண்டிய அவசர சூழ்நிலை உள்ளது.

    இது தொடர்பாக தலைமைச் செயலருக்கு 2014 அக்.13-ல் மனு அனுப்பினேன். எந்த நடவடிக்கையும் இல்லை. ஆதலால், தமிழகத்தில் "லோக் ஆயுக்த' அமைப்பை ஏற்படுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இம்மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai