Enable Javscript for better performance
மூதாட்டி கொலை: இளைஞர் கைது- Dinamani

சுடச்சுட

    

    மதுரை, ஜன. 27:  மதுரையில் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் மூதாட்டி கஸ்தூரி (76) கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

     மதுரை திருப்பாலை பாரத்நகர் நக்கீரர் தெருவைச் சேர்ந்தவர் சுப்பாராவ். பொதுப்பணித்துறை பொறியாளராக இருந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி கஸ்தூரி (76). இவர்களுக்கு மனநலம் குன்றிய மகள் மஞ்சு (38) மற்றும் மகன் உள்ளனர். சுப்பாராவ் சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் உயிரிழந்தார். மகன் திருமணமாகி வெளியூரில் வசிக்கிறார். கஸ்தூரியும் மகள் மஞ்சுடன் வசித்து வந்தார். கணவரின்  ஓய்வூதியத்தை அப்பகுதியில் வட்டிக்குக் கொடுத்து குடும்பச் செலவை நடத்தி வந்துள்ளார் கஸ்தூரி. இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த பாலையா (39) உதவி செய்து வந்தார். கட்டடம் கட்டும் பணியிலும் பாலையா ஈடுபட்டு வந்தார். இதற்காக கஸ்தூரியிடம் கடன் வாங்கியுள்ளார். கடந்த சில நாள்களாகவே கஸ்தூரி கடனைக் கேட்டு பாலையாவை நெருக்கியுள்ளார். இதனால் இருவருக்கும் அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் படுக்கையில் உள்ள தனது மகளுக்கு பால் வாங்குவதற்காக நடந்து சென்றுள்ளார் கஸ்தூரி. அப்போது அங்குவந்த பாலையா வழிமறித்து அவரிடம் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்து கஸ்தூரியை சரமாரியாக வெட்டிவிட்டு ஓடிவிட்டார் பாலையா. பலத்த காயமடைந்த கஸ்தூரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  தகவலறிந்த தல்லாகுளம் போலீஸார் விரைந்து சென்று கஸ்தூரி சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

     இதனிடையே, பாலையாவை செல்லூர் பகுதியில் பிடித்த போலீஸார், அவரிடமிருந்து ரத்தம் தோய்ந்த அரிவாள் மற்றும் ஆடைகளை கைப்பற்றினர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தினர்.

     

    பரிதாப நிலையில் மஞ்சு

    கஸ்தூரி கொலையுண்ட நிலையில், மனநலம் குன்றிய அவரது மகள் மஞ்சு பசியால் துடித்தார். தாய் உயிரிழந்ததை புரிந்து கொள்ள முடியாத அவர், போலியோவால் ஒரு கால், கை பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உதவிட யாரும் முன்வரவில்லை.

    காவல்துறையினரும், நேதாஜி தனியார் அமைப்பைச் சேர்ந்த ஹரியும் சேர்ந்து மஞ்சுவை தனியார் காப்பகத்தில் சேர்க்க முயற்சித்தனர். ஆனால், மஞ்சுவின் நிலையை கேட்ட தனியார் அமைப்புகள் அவரை ஏற்க மறுத்துவிட்டன. சமூக நல அதிகாரிகளிடம் காவல்துறையினர் தொடர்பு கொண்டபோது எவரும் உதவிட முன்வரவில்லை. இதையடுத்து எல்லீஸ் நகரில் உள்ள தனியார் காப்பகத்தில் பணம் செலுத்தி சேர்க்க முயற்சித்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai