Enable Javscript for better performance
தாழ்த்தப்பட்டோர் குடியிருப்புகளுக்கு பெயர் பதிவு: தடை கோரி ஐஏஎஸ் அதிகாரி வழக்கு: தமிழக அரசுக்கு நோட்டீஸ்- Dinamani

சுடச்சுட

    

    தாழ்த்தப்பட்டோர் குடியிருப்புகளுக்கு பெயர் பதிவு: தடை கோரி ஐஏஎஸ் அதிகாரி வழக்கு: தமிழக அரசுக்கு நோட்டீஸ்

    By மதுரை  |   Published on : 01st September 2015 07:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தாழ்த்தப்பட்டோர் குடியிருப்புகளுக்கு ஊர் பெயருடன் காலனி, சேரி, குப்பம் போன்ற பெயர்களை சேர்த்து பதிவு செய்வதற்குத் தடை கோரி முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சிவகாமி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். இம்மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

      மனுவில், தாழ்த்தப்பட்டோருக்கு சேவை செய்வதற்காக ஐஏஎஸ் அதிகாரி பணியை ராஜிநாமா செய்துவிட்டு, சமூக சமத்துவப்படை என்ற கட்சியை நடத்தி வருகிறேன். தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோர் வாழும் குடியிருப்புகள் காலனி, சேரி, குப்பம் என்று தனியாக பெயரிட்டு அழைக்கப்படுகின்றன.

      மேலும், தாழ்த்தப்பட்டோருக்கு அரசு சார்பில் கட்டப்படும் குடியிருப்புகள் பிற சாதியினர் வசிப்பிடத்தில் இருந்து தொலைவில் அமைக்கப்படுகின்றன. குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை முதலியவற்றில் முகவரி பகுதியில் ஊர் பெயருடன் காலனி, குப்பம், சேரி என்ற பெயர்கள் சேர்த்து பதிவு செய்யப்படுகின்றன.

      சாதி பாகுபாட்டை நிலைநிறுத்தும் இந்த நடவடிக்கை இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது. எனவே, அரசு ஆவணங்களில் ஊர்களின் பெயருடன் சேர்க்கப்பட்டுள்ள, காலனி, சேரி, குப்பம் ஆகிய வார்த்தைகளை நீக்கவேண்டும். பெரும்பான்மை சாதியினரின் ஊர்ப்பெயரையே தாழ்த்தப்பட்டோரின் ஊர்களாகப் பதிவு செய்யவேண்டும். இது தொடர்பாக தமிழக உள்துறை, ஊரக வளர்ச்சித் துறை, ஆதிதிராவிடர் நலத்துறைகளின் செயலர்களுக்கு மனு அனுப்பிய போதும் நடவடிக்கை இல்லை. எனவே, தமிழக அரசுக்கு இதுதொடர்பாக உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். இதே கோரிக்கையுடன் நீதி மற்றும் அமைதிக்கான மக்கள் கழக அமைப்பாளர் இராவணன் மனு தாக்கல் செய்திருந்தார்.

      இம்மனுக்கள் நீதிபதிகள் ஆர்.சுதாகர், வி.எம்.வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரே நேரில் ஆஜராகி தனது மனு குறித்து விளக்கம் அளித்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள், இம்மனுவுக்கு தமிழக அரசின் உள்துறை உள்ளிட்ட 3 துறைகளின் செயலர்கள் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai