Enable Javscript for better performance
மதுரையே தமிழகத்தின் பண்பாட்டு தலைநகர்: எழுத்தாளர் சு.வெங்கடேசன்- Dinamani

சுடச்சுட

    

    மதுரையே தமிழகத்தின் பண்பாட்டு தலைநகர்: எழுத்தாளர் சு.வெங்கடேசன்

    By மதுரை  |   Published on : 01st September 2015 07:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை மாநகரமே தமிழகத்தின் பண்பாட்டுத் தலைநகராக உள்ளது. அப்பெருமையை நாம் என்றும் காப்பது அவசியம் என சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் சு.வெங்கடேசன் கூறினார்.

     மதுரை புத்தகத் திருவிழாவில் திங்கள்கிழமை அவர் ஆற்றிய சிறப்புரை: மதுரை புத்தகத் திருவிழாவானது மாபெரும் பண்பாட்டு விழாவாக நடைபெற்றுவருகிறது. புராதன, பழம் பெருமை மிக்க மதுரை நகரின் பெருமையை மக்கள் அறிவது அவசியம்.

     மதுரையின் பழம் பெருமையை இலக்கியச் சான்றுகள் மூலமே இதுவரை அறிந்த நிலையில் தற்போது தொல்லியல் சான்றுகளும் கிடைத்துவருகின்றன.

     மதுரை தேனூரில் கிடைத்த தங்கநாணயங்களில் உள்ள கோதை எனும் பெயரும், தற்போது கீழடியில் கிடைத்துள்ள உதிரன் எனும் எழுத்துகளுடன் கூடிய பானையோடுகளும் நமது பாரம்பரியத்தை விளக்கும் தொல்லியல் சான்றுகளாகும்.

     நமது நாட்டின் வரலாறு கங்கையிலிருந்து தொடங்குவதாக கருதப்பட்டுவருவது சரியல்ல. வைகையில் தான் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே திராவிட மொழியின் ஆதாரமான தமிழின் முதல் எழுத்து "அ' தோன்றியுள்ளது.

     கிரேக்க அரசரின் உருவம் பொறித்த நாணயங்கள், மதுரையில் ஆலை அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்திலிருந்து 1895 -இல் கிடைத்ததை ஆச்சரியத்துடன் ஆங்கிலேய அதிகாரிகளே குறிப்பிட்டுள்ளனர்.

     மொகஞ்சதாரோ, ஹரப்பாவில் கூட தங்க அணிகலன்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆனால், தங்கத்தில் எழுத்துகள் மதுரையில்தான் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆகவே, பழங்காலத்தில் தமிழகத்திலேதான் சாமானியரும் எழுதப்படித்துள்ளனர். சங்ககாலத்தில் தமிழகத்தில் எழுத்து இயக்கமே நடந்துள்ளது.

     சங்க இலக்கியங்கள் சமயச் சார்பற்ற மக்கள் இலக்கியமாக இருந்திருப்பதைக் காணமுடிகிறது. அன்பையும், மனிதநேயத்தையும் உணர்வுப்பூர்வமாக எடுத்துரைப்பவையாகவே சங்க இலக்கியங்கள் உள்ளன.

     உலக நாகரிகத்தின் வளர்ச்சியில் தமிழகத்தின் பங்களிப்பு முக்கியமாக இருந்துள்ளது. அதிலும் குறிப்பாக மதுரையின் பங்களிப்பே அதிகமாகும். ஆகவே மதுரையின் பாரம்பரியப் பெருமையை நாம் மீட்டெடுப்பது அவசியம் என்றார்.

     நிகழ்ச்சியில் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத், மனிதன் பொருள் தேடும் போக்கில் செல்வது சரியல்ல எனும் பொருளில் பேசினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai