Enable Javscript for better performance
பேருந்துகளில் திருக்குறள் விளக்கவுரை கோரும் மனு: உயர்நீதிமன்றம் தலையிட மறுப்பு- Dinamani

சுடச்சுட

    

    பேருந்துகளில் திருக்குறள் விளக்கவுரை கோரும் மனு: உயர்நீதிமன்றம் தலையிட மறுப்பு

    By மதுரை  |   Published on : 02nd September 2015 05:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரசுப் பேருந்துகளில் திருக்குறளுடன் அதன் விளக்கவுரை எழுத வேண்டுமா எனபதை அரசு தான் முடிவு செய்ய வேண்டும். அதில் உயர்நீதிமன்றம் தலையிடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

     காரைக்குடியைச் சேர்ந்த கருப்பையா இம்மனுவைத் தாக்கல் செய்திருந்தார். மனுவில், திருக்குறள் உலகப் பொதுமறையாகப் போற்றப்படுகிறது. பைபிளுக்கு அடுத்தபடியாக திருக்குறள் உலகின் அதிக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. திருக்குறளில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள், அறிவுரைகள் எல்லோராலும் ஏற்றுக்கொள்ள கூடியதாகும். இத்தகையை பெருமை வாய்ந்த திருக்குறள் அரசுப்பேருந்துகளில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதன் பொருள் அதில் இடம் பெறவில்லை.

     தினமும் பொதுமக்கள் பேருந்தில் பயணம் செய்யும் போது பேருந்தில் எழுதி வைக்கப்பட்டுள்ள திருக்குறளைப் படிக்கின்றனர். ஆனால் அதன் பொருள் சாதாரண மக்களுக்கு விளங்குவதில்லை. இதனால் திருக்குறளைப் படித்தாலும் பொருள் தெரியாத நிலைக்கு ஆளாகிவிடுகின்றனர். எனவே பேருந்துகளில் திருக்குறளுடன் அதன்விளக்கவுரையை எழுதி வைக்கவேண்டும். மேலும் அரசு அலுவலகங்களிலும் திருக்குறள் தெளிவுரையுடன் இடம் பெறவேண்டும்.

      இது தொடர்பான எனது கோரிக்கைகளை அரசு நிராகரித்து விட்டது எனக் குறிப்பிட்டிருந்தார். இம்மனு நீதிபதி ஆர்.சுதாகர், வி.எம்.வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் இவ்விஷயத்தில் அரசுதான் முடிவு செய்ய வேண்டும். இதில் உயர்நீதிமன்றம் தலையிடாது எனக் குறிப்பிட்டு மனு மீதான விசாரணையை முடித்துவைத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai