Enable Javscript for better performance
வாழ்க்கை அனுபவத்தை நூலாக்கியவர் அப்துல்கலாம்: வெ.பொன்ராஜ்- Dinamani

சுடச்சுட

    

    வாழ்க்கை அனுபவத்தை நூலாக்கியவர் அப்துல்கலாம்: வெ.பொன்ராஜ்

    By மதுரை  |   Published on : 02nd September 2015 04:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வாழ்க்கை அனுபவங்களையே மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் நூலாக்கியுள்ளார் என அவரது முன்னாள் அறிவியல் ஆலோசகர் வெ.பொன்ராஜ் கூறினார்.

     மதுரை புத்தகத் திருவிழாவில் செவ்வாய்க்கிழமை இரவு அவர் ஆற்றிய சிறப்புரை: அப்துல்கலாம் இந்தியாவை வல்லரசாக்கும் வகையில் இந்தியா 2020 எனும் திட்டத்தை உருவாக்கினார். அதை மக்களவையில் சமர்ப்பித்ததுடன், மக்களிடையே கொண்டு செல்லும் வகையில் பத்து கட்டளையாக்கினார்.

    இதை இளைஞர்கள், மாணவர்களிடத்திலே கொண்டுபோய்ச் சேர்த்தார். பத்துக் கட்டளைகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு குழுவை ஏற்படுத்தி, அதன் மூலம் கடைக்கோடி மனிதர்களிடத்தும் தமது கருத்து சென்றடைய பாடுபட்டார்.

     இக் கட்டளைகளை நாம் செவ்வனே செயல்படுத்தினால், ஐந்து ஆண்டுகளிலேயே நமது நாடு வல்லரசாக, நல்லரசாக மாறும் என்பது உறுதி. அப்துல்கலாம் தமது நாற்பதாண்டு கால வாழ்க்கை அனுபவங்களையே முப்பத்தெட்டு நூல்களாக்கியுள்ளார். அவரது கனவை நனவாக்குவதற்கு நாம் பாடுபடவேண்டும்.

     உறக்கத்தில் வருவதல்ல கனவு, உறங்கச்செய்யாமலிருப்பதே கனவு என அப்துல்கலாம் அடிக்கடி கூறுவார். ஆகவே அவரது நூல்களை நாம் படித்து அதை வழிகாட்டியாகக் கொள்ளவேண்டும்.

     கிரீஸ் நாட்டுக்குச் சென்ற அப்துல்கலாம், சாக்ரடீஸ் உயிர்நீத்த குகைக்குச் சென்று இந்தியா வல்லரசாக பிரார்த்தனை செய்தார். இதையறிந்த உக்ரைன் நாட்டு தலைவர், கலாமை வணங்கினார். கலாம் விதையை விதைத்துள்ளார். அதை விருட்சமாக்குவது நமது கடமை என்றார்.

     ஆயிரம் நண்பர்களுக்குச் சமம்: நிகழ்ச்சியில் பத்திரிகையாளர் மை.பா.நாராயணன் பேசியது: நல்லதொரு நூல் ஆயிரம் நண்பர்களுக்குச் சமம். குருவானவரே கடவுளை காட்டும் வல்லமை படைத்தவர்.

     காந்தியடிகளுக்குப் பிறகு தூய்மையான, எளிமையான மக்கள் விரும்பும் தலைவராக அப்துல்கலாம் திகழ்ந்தார். அனைத்து மதத்தையும் நேசித்தவர் அவர். நற்குணத்தாலே ஒருவர் உயர்ந்தவராகிறார்.  பிறப்பால் அல்ல. நற்குணங்களை நமக்கு தருபவை புத்தகங்கள்தான்.

     தேவாரம், திருவாசகம் காலங்கடந்து  நிற்பதுபோல பாரதியின் நூல்களும் காலங்கடந்து நிற்கின்றன. மாற்றத்தில் ஏமாற்றத்தை தராதவை நூல்களே என்றார்.

     நிகழ்ச்சியில் ஊடகவியலாளர் ரா.விஜயன் வாழ்த்திப் பேசினார். அரியலூர் தமிழ்ப்பண்பாட்டு பேரமைப்பு தலைவர் பேராசிரியர் க.ராமசாமி தலைமை வகித்தார். பி.அசோக்குமார் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai