Enable Javscript for better performance
கமுதியில் அதானி குழுமத்துக்கு சட்ட விரோதமாக நிலப் பரிமாற்றமா? ஆட்சியரிடம் முறையிட உயர்நீதிமன்றம் உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    கமுதியில் அதானி குழுமத்துக்கு சட்ட விரோதமாக நிலப் பரிமாற்றமா? ஆட்சியரிடம் முறையிட உயர்நீதிமன்றம் உத்தரவு

    By மதுரை  |   Published on : 03rd September 2015 05:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில், சூரிய மின்சக்தி திட்டத்துக்காக அதானி குழுமத்துடன் நடந்த நிலப் பரிமாற்றங்களை ரத்து செய்து விசாரணை நடத்தக்கோரும் வழக்கில், மனுதாரர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்து நிவாரணம் பெற சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

     வழக்குரைஞர் ஆர். தேவரிஷி தாக்கல் செய்த மனு விவரம்: கமுதியில் குஜராத்தைச் சேர்ந்த அதானி குழுமம் சூரிய மின் சக்தி திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இதற்காக கமுதி பகுதியில் 4,000 ஏக்கர் நிலம் அதானி நிறுவனத்துக்கு பரிமாற்றம் செய்யப்பட உள்ளது.  இதுவரை கமுதி, செங்கப்படை, புதுக்கோட்டை, எம். கரிசல்குளம், முதல்நாடு ஆகிய 5 இடங்களில் 300 ஏக்கர் நிலம் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலப் பரிமாற்றம் இரவோடு இரவாக நடந்துள்ளது. மேலும் நிலத்துக்கு வழங்கப்பட்ட பணம் குறித்து வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

      சிலரது நிலம் அவர்களுக்குத் தெரியாமலேயே விற்பனை செய்யப்பட்டுள்ளது. சில நில உரிமையாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் திடீரென காணாமல் போயுள்ளனர். மாவட்ட நிர்வாகம், பதிவுத்துறை, காவல்துறை கூட்டாக செயல்பட்டு நில உரிமையாளர்களை ஏமாற்றியும், நிர்ப்பந்தம் செய்தும் நிலங்களை அதானி குழுமத்துக்கு பரிமாற்றம் செய்துள்ளன.

     எனவே அதானி குழுமம் நிலம் வாங்கியது தொடர்பான அனைத்து விற்பனை ஆவணங்களையும் ரத்து செய்து, அதுகுறித்து விசாரணை நடத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டு இருந்தார்.

     இம்மனு நீதிபதி ஆர். சுதாகர் மற்றும் வி.எம். வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் புகாரை உரிய அதிகாரிகளிடம் தெரிவித்து பதில் பெறாமல் முன்கூட்டியே நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

    மேலும் குறிப்பிடப்பட்டுள்ள புகார்களுக்கு உரிய ஆதாரங்களை இணைக்கவில்லை எனக் குறிப்பிட்டு, புகார் மனுவை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் அளித்து உரிய நிவாரணம் கோரலாம் என உத்தரவிட்டனர். மனு மீதான விசாரணை முடித்து வைக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai