Enable Javscript for better performance
சட்டவிரோத ஆழ்குழாய்க் கிணறுகள்: மனுவை பரிசீலிக்க ஆட்சியருக்கு உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    சட்டவிரோத ஆழ்குழாய்க் கிணறுகள்: மனுவை பரிசீலிக்க ஆட்சியருக்கு உத்தரவு

    By மதுரை  |   Published on : 03rd September 2015 05:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை அருகே அனுமதியின்றி ஆழ்குழாய்க் கிணறுகள் தோண்டி தண்ணீர் எடுப்போர் மீது நடவடிக்கை கோரும் மனுவை 12 வாரங்களில் ஆட்சியர் பரிசீலித்து முடிவு செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

    மதுரை மாவட்டம், ஒத்தக்கடையைச் சேர்ந்த காளிமுத்து தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.சுப்பையா இவ்வாறு உத்தரவிட்டார்.  மனுவில், மதுரை மாவட்டம் நரசிங்கம், புதுப்பட்டி, அரும்பனூர், காதக்கிணறு ஆகிய ஊராட்சிகளில் குடிநீரை விற்பனை செய்யும் நிறுவனங்கள் ஆழ்குழாய் கிணறுகளை அமைத்துள்ளன. மங்களக்குடி, கடச்சனேந்தல், நரசிங்கம், புதுப்பட்டி, அரும்பனூர், காதக்கிணறு ஆகிய இடங்களில் தனியாருக்குச் சொந்தமான இடங்கள் மற்றும் கண்மாய் பகுதிகளில் ஏராளமான ஆழ்குழாய்க் கிணறுகள் தோண்டப்பட்டு ராட்சத இயந்திரங்கள் மூலம் தண்ணீர் உறிஞ்சப்படுகிறது.

      மேற்கண்ட இடங்களில் ஆழ்குழாய்க் கிணறுகளை அமைத்துள்ள நிறுவனங்கள் அதற்கு அரசிடம் உரிய அனுமதி பெறவில்லை. தினமும் 300 லாரிகள் வரை அப்பகுதிகளில் இருந்து தண்ணீரைக் கொண்டு செல்கின்றன. மேலும் மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு தினமும் 3 லட்சம் லிட்டர் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இதன் காரணமாக அப்பகுதி மக்களுக்கு குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. சட்டவிரோதமாக ஆழ்குழாய்க் கிணறு தோண்டி தண்ணீர் எடுப்போர் மீது நடவடிக்கை கோரி மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

      இம்மனு நீதிபதி ஆர்.சுப்பையா முன்பு புதன்கிழமை விசாரிக்கப்பட்டது. மனுதாரரின் புகார் தொடர்பாக 12 வாரங்களில் பரிசீலித்து முடிவு செய்ய மதுரை மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai