Enable Javscript for better performance
பொது வேலைநிறுத்தப் போராட்டம்: 1609 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    பொது வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ரயில் மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்ட 1609 பேர் மதுரையில் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.

     மத்திய அரசு தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை கைவிட வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், மோட்டார் வாகன சட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாட்டில் உள்ள பல்வேறு தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன. இதை முன்னிட்டு மதுரையில் நடைபெற்ற போராட்டத்தில் 1609 பேர் கைது செய்யப்பட்டனர்.

      மதுரை ரயில் நிலையத்தின் மேற்கு நுழைவு வாயிலில் சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன்(எஸ்.ஆர்.எம்.யூ) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

     இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுரை கோட்டத்திற்குட்பட்ட 12 மாவட்டங்களில் இருந்து 2500 ஊழியர்கள் கலந்துகொண்டனர். கோட்டத் தலைவர் ஜி.ராமசுப்பு தலைமை வகித்தார். செயலர் ஜெ.எம்.ரபீக் சிறப்புரை ஆற்றினார்.

     இதையடுத்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், சிஐடியு இணைந்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

     பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் செக்கானூரணியில் 247 பேர், அலங்காநல்லூரில் 57 பேர், ஊமச்சிகுளத்தில் 97 பேர் என மாவட்டம் முழுவதும் 1609 பேர் கைது செய்யப்பட்டனர்.

     அரசு ஊழியர்கள் சார்பில் வருவாய்த்துறையினர் 620 பேர், ஊரக வளர்ச்சித்துறை 484 பேர், வணிகவரித்துறை 289, நீதித்துறையில் 650 பேர், சத்துணவு பணியாளர்கள் 250 உள்ளிட்ட 3537 பேர் பணிக்கு செல்லவில்லை என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் கிருஷ்ணன் தெரிவித்தார். மதுரையில் 75 சதவீத வங்கிகள் செயல்படவில்லை.

    ஜான்சி ராணி பூங்கா அருகில் ஐ.என்.டி.யு.சி, சி.ஐ.டி.யு, எல்.பி.எஃப் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்மாநில கட்டட தொழிலாளர் சங்கம் சார்பில் எல்லீஸ் நகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கீழமாரட் வீதி சாலையோர வியாபாரிகள் சங்கம் சார்பில் அப்பகுதியில் செயல்படும் 230 கடைகளும் அடைக்கப்பட்டன.

    பேருந்து, ஆட்டோக்கள் சேவையில் பாதிப்பில்லை. சிம்மக்கல் பகுதியில் சில கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

    திருமங்கலம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய அணி மாவட்ட செயலர் செல்லக்கண்ணு, திருமங்கலம் தாலுகா தலைவர் பி.தேவராஜ், இந்திய கம்யூனிஸ்ட் விவசாய அணி மாவட்ட துணை செயலர் உலகப்பா, திருமங்கலம் தாலுகா தலைவர் ஓ.சுப்புக்காளை உள்பட 108 பேர்  திருமங்கலம்-உசிலம்பட்டி சாலையில் இருந்து ஊர்வலமாகச் சென்று மதுரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். போலீஸார் அவர்களைக் கைது செய்தனர்.

    வாடிப்பட்டி:  சோழவந்தான் ரயில் நிலையத்தில் குருவாயூர் சென்னை விரைவு ரயிலை சி.ஐ.டி.யூ மாநில குழு பொன்னுத்தாய்  உள்ளிட்டோர் மறிக்க முயன்றனர். மறியலுக்கு முயன்ற 170 பேர் கைது செய்யப்பட்டனர்.

    திருப்பரங்குன்றம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புறநகர் மாவட்டச் செயலர் சி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் காளிதாஸ் ஆகியோர் தலைமையில் தொழிற்சங்கத்தினர் திருப்பரங்குன்றம் ரயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் 155 பேரை போலீஸார் கைது செய்தனர்.

    அவனியாபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன் தலைமையில் அம்பேத்கர் சிலை அருகே சாலைமறியலில் ஈடுபட்ட 53 பேர் கைது செய்யப்பட்டனர்.

    பேரையூர்: தே.கல்லுப்பட்டியில் சி.ஐ.டி.யூ. மாவட்டத் தலைவர் அரவிந்தன் தலைமையில் ஒன்றிய அலுவலகத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு மதுரை- ராஜபாளையம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சிபிஎம் ஒன்றியச்செயலர் சமையன் மற்றும் 66 பெண்கள் உள்பட 182 பேரை போலீஸார் கைது செய்தனர்.

    மேலூர்: தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தலைவர் என்.பழனிச்சாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலர் கண்ணன் உள்ளிட்டோர் மேலூர் பேருந்து நிலையம் மறியலுக்கு முயன்றனர். 16 பெண்கள் உள்ளிட்ட 130 பேரை போலீஸார் கைது செய்தனர்.

    தமிழ்நாடு அரசு கலைக்கல்லூரிகள் ஆசிரியர் சங்கத் தலைவர் எட்சர் தலைமையில் கல்லூரி ஆசிரியர்கள் ஆர்பாட்டத்திலும், வகுப்பு புறக்கணிப்பிலும் ஈடுபட்டனர்.

    அஞ்சல் சேவைகள் பாதிப்பு: தபால்துறையை தனியார் வசம் ஒப்படைக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொது வேலைநிறுத்தத்தில் தபால்துறை ஊழியர்களும் பங்கேற்றனர். எஃப்.என்.பி.ஓ கோட்டச் செயலர் கே.வி.ராஜன் கூறும்போது, போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மதுரையில் உள்ள அனைத்து கிளை தபால்நிலையங்களும் மூடப்பட்டன என்றார். இதனால் தபால் சேவைகள் பாதிப்படைந்தன.

    ஆனால், கிராமப்புற புறநிலை அஞ்சல் ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்காததால் கிராமங்களில் சேவைகள் பாதிப்படையவில்லை. மதுரைக் கோட்டத்திற்குட்பட்ட 650 கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டதாக அச்சங்கத்தின் கோட்டச் செயலர் எம்.மதியழகன் தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai