Enable Javscript for better performance
மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்- Dinamani

சுடச்சுட

    

    மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்

    By மதுரை  |   Published on : 04th September 2015 05:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் வியாழக்கிழமை வாபஸ் பெறப்பட்டது.

     ஊதிய உயர்வு, தினக்கூலிப் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாநகராட்சியின் துப்புரவுப் பணியாளர்கள் திங்கள்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினர். சிஐடியு, தொமுச, தொழிலாளர் விடுதலை முன்னணி உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களைச் சேர்ந்த துப்புரவுப் பணியாளர்கள் ஏறத்தாழ 2 ஆயிரம் பேர் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், நகரில் துப்புரவுப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

     இந்நிலையில், துப்புரவுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் தினக்கூலியை ரூ.115 இல் இருந்து ரூ.226 ஆக உயர்த்த மாநகராட்சி நிர்வாகம் உறுதி அளித்த போதும், சில தொழிற்சங்கங்கள் இதை ஏற்கவில்லை. இதனால் நான்காவது நாளாக வியாழக்கிழமையும் வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்ந்தது. இருப்பினும் மாநகராட்சி வளாகத்துக்குள் துப்புரவுப் பணியாளர்கள் அனுமதிக்கப்பட வில்லை. அதையடுத்து அவர்கள் சாலையோரம் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர். கண்களைக் கட்டிக் கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். இதன்பின்னர், தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் மாநகராட்சி துணை ஆணையர் செ.சாந்தி பேச்சு நடத்தினார். ஏறத்தாழ 3 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில், தினக்கூலி பணியாளர்களுக்கான ஊதியம் உயர்த்தப்படும் என உறுதியளிக்கப்பட்டதையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

     மாநகராட்சி ஆணையர் அளவில் தீர்க்க வேண்டிய கோரிக்கைகளுக்கு உடனடியாகத் தீர்வு காணப்படும்.

     மேலும், தினக்கூலி துப்புரவுப் பணியாளர்கள் 690 பேரை பணி நிரந்தரம் செய்யவும், ஹட்கோ மூலமாக துப்புரவுப் பணியாளர்களுக்கு வீட்டுவசதி ஏற்படுத்தித் தரவும் அரசுக்கு பரிந்துரை செய்ய உள்ளோம். 2015 ஏப்ரல் முதல் தினக் கூலிப் பணியாளர்களுக்கான ஊதியம் ரூ.226 என நிர்ணயிக்கப்படும். முந்தைய மாதங்களுக்கான நிலுவைத் தொகை அக்டோபர் முதல் வழங்கப்படும் என்று துணை ஆணையர் சாந்தி தெரிவித்தார்.

     இந்நிலையில், தொழிலாளர் விடுதலை முன்னணி அமைப்பைச் சேர்ந்த துப்புரவுப் பணியாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். தொழிலாளர் விடுதலை முன்னணி மாநிலத் துணைச் செயலர் ஆர்.போஸ் தலைமையில் பிரதிநிதிகள் ஆட்சியர் எல்.சுப்பிரமணியனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai