Enable Javscript for better performance
அழகிரி கருத்து: திமுக மதுரை மாவட்டச் செயலர்கள் கண்டனம்: இரட்டை வேடம் போடுவதாகக் குற்றச்சாட்டு- Dinamani

சுடச்சுட

    

    அழகிரி கருத்து: திமுக மதுரை மாவட்டச் செயலர்கள் கண்டனம்: இரட்டை வேடம் போடுவதாகக் குற்றச்சாட்டு

    By மதுரை  |   Published on : 05th September 2015 05:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூறிய கருத்துக்களுக்கு மதுரை மாவட்ட திமுக செயலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

      வரும் பேரவைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக ஸ்டாலினை முன்னிறுத்தினால் திமுக படுதோல்வி அடையும் என்று அண்மையில் மு.க.அழகிரி கூறியிருந்தார்.  இது குறித்து மதுரை மாநகர் மாவட்டச் செயலர்கள் வ.வேலுச்சாமி (வடக்கு), கோ.தளபதி (தெற்கு), திமுக தீர்மானக் குழுத் தலைவர் பொன்.முத்துராமலிங்கம் ஆகியோர் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

     திமுகவில் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், கட்சியைப் பற்றி பேசுவதற்கு மு.க.அழகிரிக்கு உரிமை இல்லை. கடந்த மக்களவைத் தேர்தல் உள்பட ஏற்கெனவே தேர்தல் நேரங்களில் திமுகவுக்கு எதிரான கருத்துக்களைக் கூறி, கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். திமுக ஆட்சியில் இருக்கும் போது அதிகாரத்தை கையில் எடுத்துக் கொள்வதும், ஆட்சி இல்லாத நிலையில் ஆளுங்கட்சிக்கு ஆதரவான அணுகுமுறையைப் பின்பற்றுவதும் அவரது வழக்கம். ஆளுங்கட்சியின் தாக்குதல்களில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காகவே இத்தகைய கருத்துக்களைக் கூறி வருகிறார். அவரது இரட்டை வேடத்தை மதுரை மக்கள் மட்டுமின்றி தமிழக மக்கள் அனைவரும் நன்கு அறிவர்.

     கருத்துக் கணிப்பு என்பது வானிலை அறிக்கையைப் போன்றது, அது உண்மையாகலாம் அல்லது இல்லாமலும் போகலாம். ஆகவே, அதை கையில் எடுத்துக் கொண்டு விமர்சிக்க வேண்டிய அவசியம் இல்லை. அதே நேரம் கட்சியின் வளர்ச்சிக்கு முழு மூச்சாகப் பணியாற்றி வரும் ஸ்டாலின் குறித்து, அழகிரி விமர்சனம் செய்வது, அரசியலில் அவர் தரக்குறைவானவர் என்பதை வெளிப்படுத்தியுள்ளது என்றனர்.

     திமுக நிர்வாகிகள் பெ.குழந்தைவேலு, முன்னாள் அமைச்சர் ஆ.தமிழரசி, நிர்வாகிகள் ஜெயராமன், எஸ்ஸார் கோபி, மிசா பாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர்.  இதே போல, மதுரை மாவட்ட திமுக செயலர்கள் பி.மூர்த்தி (வடக்கு), எஸ்.மணிமாறன் (தெற்கு) ஆகியோர் முன்னிலையில் சட்டப்பேரவை முன்னாள் தலைவர் சேடப்பட்டி முத்தையா கூறியதாவது:

     திமுக மீது ஆதரவு அலை உருவாகி இருக்கிறது. 2016 பேரவைத் தேர்தலில், திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதை அண்மையில் வெளியான கருத்துக் கணிப்பு உறுதி செய்திருக்கிறது. இதை ஏற்றுக் கொள்ள முடியாத பிற கட்சியினரும், அழகிரியும் விமர்சனம் செய்துள்ளனர். கட்சிக்கு சம்பந்தம் இல்லாதவர், திமுகவைப் பற்றிப் பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

     திமுக தலைவர் கருணாநிதியையும், பொருளாளர் ஸ்டாலினையும் அனைவரும் மனதாரா ஏற்றுக் கொண்டிருக்கிறோம். செப். 25-ஆம் தேதி மதுரை மாவட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்கும் நமக்கு நாமே சுற்றுப் பயணத் திட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறியும் திட்டத்தை வெற்றிபெறச் செய்ய அனைத்து ஏற்பாடுகளைச் செய்து வருகிறோம். இத் திட்டத்தில் மக்களிடம் வரவேற்பும், எதிர்பார்ப்பும் இருப்பதைக் காண முடிகிறது. இச்சூழலில் அழகிரியின் கருத்து கட்சியில் எவ்வித சலசலப்பையும் ஏற்படுத்தாது என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai