Enable Javscript for better performance
ஒரே தெருவில் உள்ள இரு மதுக் கடைகளை அகற்ற உயர்நீதிமன்றம் கெடு- Dinamani

சுடச்சுட

    

    ஒரே தெருவில் உள்ள இரு மதுக் கடைகளை அகற்ற உயர்நீதிமன்றம் கெடு

    By மதுரை  |   Published on : 05th September 2015 05:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரையில் ஒரே தெருவில் உள்ள இரு மதுக் கடைகளை  அகற்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை 6 வாரம் கெடு விதித்துள்ளது.

     மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த ஏ.பெருமாள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.  மனு விவரம்:  அவனியாபுரம் செம்பூரணி சாலையில் இரு மதுபானக் கடைகள் அருகருகே உள்ளன.

    இந்த மதுக் கடைகளில் இருந்து 50 மீட்டர் தொலைவில் மாரியம்மன் கோயில் மற்றும் தனியார் மழலையர் பள்ளி ஆகியன உள்ளன.

     மேலும் திருமண மண்டபம், அரசு நடுநிலைப் பள்ளி, பேருந்து நிறுத்தம் ஆகியவையும் அருகில் உள்ளன.

     மாநகராட்சி எல்லையில் 50 மீட்டர் சுற்றளவில் கல்வி நிலையங்கள், வழிபாட்டுத் தலம் இருந்தால் மதுபானக் கடை அமைக்கக் கூடாது என தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதியில் கூறப்பட்டு உள்ளது. இந்த விதியை மீறி சட்ட விரோதமாக இக்கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    எனவே இந்த கடைகளை அகற்றுமாறு மாவட்ட ஆட்சியர், டாஸ்மாக் மேலாளர் உள்ளிட்டோருக்கு  மனுக்கள் அனுப்பியும் நடவடிக்கை இல்லை. எனவே இரு கடைகளையும் வேறு இடத்துக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

    இம்மனு நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, விஎஸ்.ரவி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் மாவட்ட ஆட்சியரிடம் பதில் கேட்டு தெரிவிப்பதாகக் கூறப்பட்டது. 

    பின்னர் இரு கடைகளையும் 6 வாரங்களில் வேறு இடத்துக்கு மாற்றுவதாக ஆட்சியர் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்த நீதிபதிகள் கடைகளை அகற்ற 6 வாரங்கள் அவகாசம் அளித்து விசாரணையை ஒத்தி வைத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai