Enable Javscript for better performance
சங்க இலக்கியம் ஆரோக்கியத்தின் வழிகாட்டி: மருத்துவர் கு.சிவராமன்- Dinamani

சுடச்சுட

  

  சங்க இலக்கியம் ஆரோக்கியத்தின் வழிகாட்டி: மருத்துவர் கு.சிவராமன்

  By மதுரை  |   Published on : 05th September 2015 05:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஆரோக்கியமான வாழ்க்கைக்குரிய உணவுகளை அடையாளம் காட்டுபவையாக நமது சங்க இலக்கியங்கள் உள்ளன என சித்த மருத்துவர் கு.சிவராமன் கூறினார்.

   மதுரை புத்தகத் திருவிழாவில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற கருத்தரங்கில் அவர் பேசியதாவது:

   பன்னாட்டு வணிக நிறுவனங்கள் பொருள்களை மக்களிடம் கொண்டு செல்ல பலவித தந்திரங்களைக் கையாளுகின்றன. இதனால் உண்மையான பாரம்பரிய உணவுப் பொருள்களை மறந்து, பன்னாட்டு உணவுகளை உண்ணும் பழக்கம் அதிகரித்து வருகிறது. இது நமது உடலின் ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது என்பதை அறியாமலிருக்கிறோம்.

   நம் நாட்டில் வரும் 2020 ஆம் ஆண்டில் சர்க்கரை, ரத்த அழுத்த நோய் பாதிப்புக்கு உள்ளாவோரின் எண்ணிக்கையானது 1000-க்கு 746 பேராக இருக்கும் என்கிறார்கள் மருத்துவ ஆய்வாளர்கள். இது போன்ற பிரச்னைகளே நம் முன் நிற்கப் போகும் மிகப் பெரிய சவாலாகும்.

   புற்றுநோயின் தாக்கமும் நம் நாட்டில் அதிகரிக்கும் அபாயமும் உள்ளது. விவசாயத்தில் களைக் கொல்லி மருந்துகளால் புற்றுநோய் பாதிப்பும் மனிதர்களுக்கு ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

    இதற்கெல்லாம் உணவுக் கட்டுப்பாடு முறை நம்மிடம் இல்லாததே காரணமாகும் என்பது மருத்துவர்களின் கருத்து.

   தற்போதைய நிலையில், இளைஞர்கள் மத்தியில் எந்தப் புரிதலும் இல்லாத வகையில் மனச்சிதைவு காணப்படுகிறது. சுற்றுச் சூழலில் நாம் ஏற்படுத்தும் பாதிப்புகள் இயற்கைப் பேரழிவுகளாக நம்மையே திருப்பித் தாக்குகின்றன. சமீப காலமாக சிட்டுக்குருவி போன்ற பறவையினங்கள் அழிவை நோக்கியுள்ளதும் தெரிய வந்துள்ளது. 

    உலக அளவில் சிறந்த காலை உணவு எது என நடத்தப்பட்ட ஆய்வில், இட்லி தான் சிறப்பானது எனக் கண்டறியப்பட்டுள்ளது. ஆக, தமிழர்கள் தயாரிக்கும் இந்த உணவே உடலுக்கு நல்லது என சர்வதேச ஆய்வுகள் நிரூபிக்கின்றன.

    தமிழ் இலக்கியங்கள் உள்ளத்துக்கு மட்டுமல்ல, உடலுக்குரிய மருத்துவக் குறிப்புகளையும் கொண்டுள்ளன. தமிழர்கள் வரகு, தினை, அவரை, கொள்ளு ஆகிய உணவுப் பொருள்களை பயன்படுத்தியதை புறனாநூற்றில் காணலாம்.

   தமிழகத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பாரம்பரிய நெல் வகைகள் இருந்துள்ளதை, சங்க இலக்கியங்கள் மூலம் அறிய முடிகிறது. தமிழர்களிடமிருந்த அறச்சிந்தனையும், அறிவுப்பூர்வ இயற்கை விவசாயத்தாலும் உடல்நலம் காக்கப்பட்டதை நமது இலக்கியங்கள் மூலம் அறிய முடிகிறது. ஆகவே இயற்கை சார்ந்த நமது வாழ்க்கையை தொடர சங்க இலக்கியம் காட்டும் வழியில் வாழ்வது அவசியம் என்றார்.

     கல்லூரிக் கல்வித்துறை இணை இயக்குநர் வே.இந்துமதி தனது சிறப்புரையில், நல்ல புத்தகங்களை வாசிக்கும் வாய்ப்பை குழந்தைகளுக்கு ஏற்படுத்துவது பெற்றோரின் கடமை என்றார். நிகழ்ச்சியில் பபாசி துணை இணைச் செயலர் ரத்தின ஆடம் சாக்ரடீஸ் வரவேற்றார். பபாசி செயலர் கே.எஸ்.புகழேந்தி நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai