Enable Javscript for better performance
மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் பணி நிரந்தரம்: உயர்நீதிமன்றம் உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் பணி நிரந்தரம்: உயர்நீதிமன்றம் உத்தரவு

    By மதுரை  |   Published on : 05th September 2015 05:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் 309 பேரை பணி நிரந்தரம் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

     மாநகராட்சி துப்புரவு ஊழியர் பி.பரமசிவன், மதுரை மாநகராட்சி தொழிலாளர் சங்கப் பொதுச் செயலர் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன் இவ்வாறு உத்தரவிட்டார்.  மனு விவரம்:

     மதுரை மாநகராட்சியில் 309 பேர் தினக்கூலிகளாக 6 ஆணடுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வருகின்றனர். வங்கிக் கணக்கில் ஊதியம் செலுத்தப்படுகிறது. தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டப்படி பணி நிரந்தரம் பெற தகுதி இருக்கிறது. எங்களை பணி நிரந்தரம் செய்ய தொழிலாளர் ஆய்வாளர் 2013 பிப்.21இல் உத்தரவிட்டார். அந்த உத்தரவை செயல்படுத்த மதுரை மாநகராட்சிக்கு உத்தரவிடவேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனர்.

     மாநகராட்சி நிர்வாகத்தை தொழில் நிறுவனங்களுடன் ஒப்பிட முடியாது. தொழில் நிறுவன சட்ட விதிகள் மாநகராட்சிக்குப் பொருந்தாது. மேலும் மாநகராட்சிப் பணியாளர் விதிகளின்படி மனுதாரர்கள் 480 நாள்கள் தொடர்ச்சியாக பணியாற்ற வில்லை. எனவே தொழிலாளர் ஆய்வாளரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

     இம்மனுக்களை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவு:

     துப்புரவுப் பணியாளர்கள் அனைவரும் தாற்காலிக அடிப்படையில் தினக் கூலிகளாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளதையும் அவர்களுக்கு வங்கி மூலம் ஊதியம் வழங்கப்படுவதையும் மாநகராட்சி மறுக்க வில்லை. தொழிலாளர் பணி நிரந்தரம் தொடர்பான 1981-ஆம் ஆண்டு சட்டம் மாநகராட்சிக்குப் பொருந்தாது என்பதை ஏற்க முடியாது. மாநகராட்சி துப்புரவு ஊழியர்களுக்கும் இச்சட்டம் பொருந்தும். எனவே மாநகராட்சியின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

    மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் 309 பேருக்கும் 480 நாள்கள் பூர்த்தி செய்த நாளில் இருந்து அவர்களைப் பணி நிரந்தரம்

    செய்ய வேண்டும். இரு மாதங்களில் பணி நிரந்தரம் செய்து, அவர்களுக்கு உரிய பணப் பலன்களை 6 மாதங்களில் வழங்க வேண்டும். இந்த உத்தரவை மதுரை மாநகராட்சி நிறைவேற்றவில்லை என்றால், தொழிலாளர்கள் சட்டப்படி புகார் கொடுத்து குற்றவியல் நடவடிக்கை எடுக்கலாம். அந்தப் புகாரை அளிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய அனுமதி வழங்க வேண்டும் என உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai