Enable Javscript for better performance
\\\"உணவினால் வென்றிடலாம் நோய்களை\\\'- Dinamani

சுடச்சுட

    

    பீட்ஸா, பர்கர் என மாறிவிட்ட உணவுப் பழக்கம் இளம் வயதினருக்குக் கூட சர்க்கரை நோய், உடல் பருமன், மாரடைப்பு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

     நாகரிகம் என்ற பெயரில் துரித உணவுகள், பொட்டலங்களில் அடைக்கப்பட்ட உணவுகள் புழக்கத்தில் அதிகரித்து விட்டன. இத்தகைய உணவுப் பழக்கத்தைக் கைவிட்டால் மட்டுமே புதிய, புதிய நோய்களில் இருந்து விடுபட முடியும் என்பதை விளக்கும் வகையில், தினமணி ஆரோக்கியம்-இலவச மருத்துவக் கண்காட்சியில் அப்போலோ மருத்துவமனை அரங்கு அமைத்திருந்தது.

     உடல் நலத்தைச் சீராகப் பராமரிக்க பின்பற்ற வேண்டிய உணவுப் பழக்கத்தை விளக்கும் பிரமீடு, கண்காட்சியில் பங்கேற்ற பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

     இதுகுறித்து அப்போலோ மருத்துவமனையின் மூத்த உணவியல் நிபுணர் வி.சுகன்யா கூறியதாவது:

     ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 1 முதல் 7 ஆம் தேதி வரை தேசிய ஊட்டச்சத்து வாரமாகக் கடைபிடிக்கப்படுகிறது. இதை அடிப்படையாக வைத்தே, இந்த கண்காட்சியிலும் ஊட்டச் சத்துக்கு முக்கியத்துவம் அளித்து அரங்கம் அமைத்துள்ளோம். உடல் நலத்தைப் பாதுகாக்க உணவில் அதிகளவில் காய்கறிகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. அதாவது உணவுடன் தினமும் 3 விதமான காய்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். மதிய உணவின் போது மட்டுமே காய்கறிகள் எடுத்துக் கொள்ளப்படுகிறது. அதை மாற்றி காலை, மதியம், இரவு என 3 வேளை உணவிலும் பச்சைக் காய்கறிகள், கீரைகள் சேர்த்துக் கொள்வது நல்லது. அதே போல, வாரத்துக்கு 5 வகையான பழங்கள் எடுத்துக் கொள்ளலாம். பழச்சாறு செய்து அருந்தாமல், பழமாக உட்கொள்வது முழுமையான பயன் அளிப்பதாக இருக்கும்.

     நாம் எடுத்துக் கொள்ளும் உணவில் எண்ணெய், சர்க்கரை சார்ந்த பொருள்கள் குறைவாகவும், அதற்கு சற்று அதிகமாக பால், பால் பொருள்கள் மற்றும் மாமிசம், அடுத்ததாக உடல் உழைப்புக்கு ஏற்ப தானியங்கள், பயறு வகைகள், அதிகளவில் காய்கறிகள் மற்றும் பழங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். உடல் ஆரோக்கியத்துக்கான உணவுப் பொருள் பிரமீடு இதைத் தான் தெளிவுபடுத்துகிறது என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai