Enable Javscript for better performance
சமய இலக்கியங்களே வாழ்வை நெறிப்படுத்தும்: இளம்பிறை மணிமாறன்- Dinamani

சுடச்சுட

    

    சமய இலக்கியங்களே வாழ்வை நெறிப்படுத்தும்: இளம்பிறை மணிமாறன்

    By மதுரை  |   Published on : 06th September 2015 08:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சமய இலக்கியங்களே வாழ்வை நெறிப்படுத்தும் என பேராசிரியை இளம்பிறை மணிமாறன் சனிக்கிழமை கூறினார்.

     மதுரையில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் அவர் பேசியதாவது: மனிதன் அறிவு மேம்பட காரணமாக இருப்பவை புத்தகங்கள் தான். குறிப்பிட்ட துறை சார்ந்த தகவல்களை அளிப்பதோடு புத்தகங்கள் நின்று விடுவதில்லை. புத்தகத் தகவல்களை படிப்போர் பின்பற்றும் வகையில் கருத்துச்செறிவை அவை உள்ளடக்கியிருந்தாலே அவை சிறந்த புத்தகமாக அமையும்.

     சுதந்திரச் சிந்தனையை நம்மிடம் வளர்ப்பவை புத்தகங்களேயாகும். தமிழ் இலக்கியங்கள் உலக நலனை முன்நிறுத்தியே எழுதப்பட்டுள்ளன. திருக்குறள் சாதி, மதம்  கடந்து அறத்தை வலியுறுத்துவதாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.   உலகின் எப்பகுதியில் வாழும் மக்களின் வாழ்க்கைக்கு பொருந்துவதாக திருக்குறளின் கருத்துக்கள் இருப்பதால் தான் அதை உலகப் பொதுமறை என்கின்றனர்.

      திருக்குறள் போன்ற இலக்கிய நூல்கள் தமிழ் மொழிக்கு மட்டும் சொந்தமானவையல்ல. மனிதரின் திறன், தன்னம்பிக்கை, குடும்ப கட்டமைப்பு, சகிப்புத் தன்மை என அனைத்துக்கும் தேவையான கருத்துக்கள் அதில் அடங்கியுள்ளன.

      வாழ்க்கை நெறிகளை ஒரு சேர கற்றுத் தரும் காவியமே ராமாயணம். குடும்பக் கட்டமைப்புகள் இன்று சிதைந்து வரும் சூழலில், அனைவரிடமும் கட்டாயம் இருக்க வேண்டிய நூலாக ராமாயணத்தை குறிப்பிடலாம்.

     பெண்கள் எப்படி இருந்தால் குடும்பம் சிறக்கும், ஆண்கள் எப்படி பெண்களிடம் நடந்து கொள்ள வேண்டும் என வாழ்வின் அனைத்து நிலைகளையும் நமக்குக் கற்றுத் தருவதாக ராமாயணம் உள்ளது.

     தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என எடுத்துக்காட்டி வாழ்ந்த ராமனின் கதையே ராமாயணம். ஆனால், இப்போது தந்தை சொல்லை எத்தனை மகன்கள் மதித்து நடக்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டியது அவசியம். ஆகவே நல்ல குடும்பம் உருவாக வேண்டுமெனில் ராமாயணம் கற்பது அவசியம்.

     அண்ணன்- தம்பிகளிடையே இன்று மோதல் நிகழ்வதை செய்திகளில் பார்க்கிறோம். ஆகவே, அண்ணனுக்காக காடு சென்றதுடன், தூங்காமல் அண்ணனைக் காத்த  லட்சுமணனை நாம் வளரும் நமது தலைமுறையினருக்கு கற்பிக்க வேண்டியது அவசியம்.

      மனதின் தூய்மையைப் பொறுத்தே நமது மகிழ்ச்சி உள்ளது. நல்ல மனம் கொண்டோர் நினைப்பது தானாகவே நடக்கும். வாழ்வை நெறிப்படுத்த சமய இலக்கியங்களும், சிந்தனையைத் தூண்டும் இலக்கியங்களும் அவசியம். அத்தகைய இலக்கியங்களை நாம் தேடிப் படித்து பயன் பெற வேண்டும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai