தமிழின் புகழ் பரப்ப தொழில் நுட்பத்தை பயன்படுத்துவது அவசியம்: தமிழ் இணையக் கல்விக் கழக இயக்குநர் த.உதயச்சந்திரன்
By மதுரை | Published on : 06th September 2015 08:21 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
தமிழின் புகழ் பரப்ப தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவது அவசியம் என்று தமிழக அரசின் நிதித் துறைச் செயலரும், தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் இயக்குநருமான த.உதயச்சந்திரன் கூறினார்.
மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற "கணித் தமிழ்' பேரவைத் தொடக்க விழாவில் அவர் பேசியதாவது:
தமிழின் மூலம் உலகிற்கு எடுத்துரைக்க பல அரிய தகவல்கள் உள்ளன. அவற்றை வெளிக்கொண்டு வந்தால் தமிழர்களுக்கு சர்வதேச அரங்கில் ஒரு மதிப்பு ஏற்படும். அதிவேக வளர்ச்சி கண்டுள்ள தொழில் நுட்பத்தின் மூலம் தமிழை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வதற்கான முயற்சி இது. பழங்கால நூல்களை மின் உருவாக்கம் செய்து இணையத்தில் பதிவேற்றுவது, அரிய தகவல்களை பரிமாறிக் கொள்வது, தமிழ் மொழியில் ஆராய்ச்சிகள் மேற்கொள்வது உள்ளிட்டவை இந்தக் "கணித் தமிழ்' பேரவையின் நோக்கம்.
சங்க இலக்கியம், பாரம்பரிய மருத்துவக் குறிப்புகள் போன்றவற்றை இணையத்தில் பதிவேற்றுவதன் மூலம் அவற்றை அழிவில்லாமல் பாதுகாக்கலாம். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்ட ஓலைச் சுவடிகளை மின் உருவாக்கம் செய்வதன் மூலம் அக்காலத்தில் வாழ்ந்த பல அறிஞர்களின் கலை, இலக்கியம், மருத்துவக் குறிப்புகளை தற்காலத்துக்கு ஏற்றவாறு உபயோகப்படுத்தலாம். இணையத்தில் பதிவேற்றப்படும் குறிப்புகள் ஒலி அமைப்பிலும் பதிவேற்றப்படுவதால் பார்வையற்றவர்கள் இக்குறிப்புகளை வைத்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ள முடியும். இந்திய அளவில் தமிழ் மொழியில் 68 ஆயிரம் கட்டுரைகள் மட்டுமே இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. "கணித் தமிழ் பேரவை' பணிகளைத் தொடங்கினால் இந்த எண்ணிக்கையை அதிகரிக்கலாம்.
இதன் மூலம், தமிழர்களின் குறிப்புகள் மட்டுமல்லாமல் கோயில் ஓவியங்கள், பாறை மற்றும் குகை ஓவியங்களையும் மின் உருவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நாட்டில் உள்ள கல்வெட்டுகளில் மூன்றில் ஒரு சதவீதம் மட்டுமே ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
கணித் தமிழ் பேரவையின் பணிகள் தொடங்கினால் இத்தகைய ஆய்வுகள் மேலும் வேகம் பெறும்.
கல்லூரிகள் அனைத்தும் தமிழ் மொழி ஆராய்ச்சிகளை ஊக்குவிக்க வேண்டும். விரும்பும் கல்லூரிகளில் அரசு நிதி உதவியுடன் "கணித் தமிழ் பேரவை' அமைத்துத் தரப்படும். தமிழ் பயிலும் மாணவர்கள் மட்டுமின்றி கணினி பொறியியல் மாணவர்களும் இணைந்தால் தமிழ் சார்ந்து இயங்கும் செயலிகளை உருவாக்கலாம் என்றார்.
எழுத்தாளர் சு.வெங்கடேசன், தமிழ் இணையக் கல்விக் கழக உதவி இயக்குநர் மா.தமிழ்பரிதி, கணித் தமிழ் சங்கத் தலைவர் சொ.ஆனந்தன், உலகத் தமிழ்ச் சங்க தனி அலுவலர் க.பசும்பொன், மதுரை காமராஜர் பல்கலைக் கழகப் பதிவாளர் ந.ராஜசேகர், துணைவேந்தர் பொறுப்புக் குழு உறுப்பினர்கள் ராஜராஜன், வெங்கட்ராமன், கணித் தமிழ் பேரவை ஒருங்கிணைப்பாளர் ஜெ.பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.