Enable Javscript for better performance
ஆட்டோக்களில் ஓட்டுநர் பெயர், முகவரி, புகைப்படம் அடங்கிய ஸ்டிக்கர்- Dinamani

சுடச்சுட

    

    ஆட்டோக்களில் ஓட்டுநர் பெயர், முகவரி, புகைப்படம் அடங்கிய ஸ்டிக்கர்

    By மதுரை,  |   Published on : 07th September 2015 02:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆட்டோக்களில் பயணம் செய்வோர் சம்பந்தப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் பெயர், முகவரி, செல்லிடப்பேசி எண் ஆகியவற்றைத் தெரிந்து கொள்ளும் வகையில் புகைப்படத்துடன் கூடிய ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன.

    மதுரை மாநகரில் 8 ஆயிரம் ஆட்டோக்கள் உள்ளன. ஆட்டோக்களின் விதிமீறல், அதிக கட்டணம் வசூலிப்பது போன்ற புகார்கள் தெரிவிக்கும்போது, சம்பந்தப்பட்ட ஆட்டோ குறித்த விவரத்தைப் பொதுமக்கள் கூறுவதில்லை. அதோடு, பயணம் செய்யும்போது அவர்களால் தெரிந்து கொள்ள முடியவில்லை. இதைக் கருத்தில் கொண்டு மதுரை நகரில் இயங்கும் ஆட்டோக்களில், ஓட்டுநர் இருக்கையின் பின்பகுதியில் இந்த விவரங்கள் அடங்கிய ஸ்டிக்கர் ஒட்டும் பணி நடைபெற்று வருகிறது. மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியன், போக்குவரத்து இணை ஆணையர் வா.பாலன் ஆகியோர் உத்தரவின்பேரில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் ஜே.கே.பாஸ்கரன் (மதுரை மையம்), கே.கல்யாணகுமார் (வடக்கு), எம்.சிங்காரவேலு (தெற்கு) ஆகியோர் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் தனித்தனிக் குழுவாக நகரின் பல்வேறு பகுதிகளிலும் ஆட்டோக்களில் இந்த தகவல் ஸ்டிக்கர்களை ஒட்டினர்.

    மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், ரயில் நிலையம், பெரியார் நிலையம், ஆரப்பாளையம் பேருந்து நிலையம், காமராஜர் சாலை, அண்ணா நகர் பிரதான சாலை ஆகிய பகுதிகளில் ஆட்டோக்களில் ஸ்டிக்கர் ஒட்டும் பணி கடந்த 3 நாள்களாக நடைபெற்று வருகிறது.

    இதுகுறித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜே.கே.பாஸ்கரன் கூறியது:

    இந்த ஸ்டிக்கரில் ஆட்டோ உரிமையாளர் பெயர், முகவரி, செல்லிடப் பேசி எண் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் பெயர், முகவரி, செல்லிடப்பேசி எண், புகைப்படம், எந்த வட்டாரப் போக்குவரத்துக்கு அலுவலகத்தைச் சார்ந்தது போன்ற விவரங்கள் இருக்கும்.

    ஆட்டோ ஓட்டுநருடன் பயணிகளுக்கு ஏதேனும் எதிர்மறை கருத்துகள் இருந்தாலோ, பொருள்களைத் தவறவிட்டாலோ, ஓட்டுநர் தகாத முறையில் நடந்து கொண்டாலோ தகவல் தெரிவிக்க இந்த விவரங்கள் உதவியாக இருக்கும். மேலும் ஆட்டோ ஓட்டுநர்களும், இத்தகைய விவரங்கள் இருப்பதால் பயணிகளிடம் கண்ணியக் குறைவாக நடந்து கொள்ளமாட்டார்கள்.

    ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு ஆட்டோ உரிமையாளர்கள், ஓட்டுநர்கள், தொழிற்சங்கத்தினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதுவரை 60 சதவீத ஆட்டோக்களில் ஸ்டிக்கர் ஒட்டி முடிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாள்களில் அனைத்து ஆட்டோக்களிலும் முழுமையாக ஸ்டிக்கர் ஒட்டி முடிக்கப்படும்.

    போக்குவரத்துத் துறையினரால் சோதனையிடும்போது, இந்த ஸ்டிக்கர் கண்டிப்பாக இருக்க வேண்டும். இல்லையெனில் முதல் சோதனையில் ரூ.200-ம், இரண்டாவது முறையாக சோதனையிடும்போது இல்லையெனில் ரூ.500-ம் அபராதமாக விதிக்கப்படும் என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai