Enable Javscript for better performance
\\\"தமிழ் நூல்கள் மின்நூல்களாக மாற்றப்படும்\\\'- Dinamani

சுடச்சுட

    

    பழந்தமிழ் நூல்கள் அனைத்தும் ஐந்தாண்டுகளில் மின்நூல்களாக மாற்றப்படும் என தமிழ் இணையக் கல்விக் கழக இயக்குநர் த.உதயச்சந்திரன் கூறினார்.

    மதுரை புத்தகத் திருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை அவர் பேசியது: மதுரை புத்தகத் திருவிழாவை பண்பாட்டுத் திருவிழாவாக பரிணாமிக்கச் செய்யவேண்டும். மதுரை அருகே கீழடியில் நடந்த அகழ்வாராய்ச்சியில் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு நாகரிகம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

    மதுரையானது தமிழ்ப் பண்பாட்டின் தலைநகர் என்பதால், இங்கு கணித் தமிழ்ப் பேரவையை தொடங்கினோம். அனல்வாதம், புனல்வாதத்தால் நூல்களை இழந்தார்கள். இனி நூல்களை இழக்கும் நிலை ஏற்படக்கூடாது என்பதற்காக அவற்றை மின்னுருவாக்கம் செய்யும் அவசியம் உள்ளது.

    தமிழகத்தில் இன்னும் 4 மாதங்களில் 1560ஆம் ஆண்டிலிருந்து, அரிய தமிழ் நூல்களை இணையத்தில் பதிவேற்றம் செய்யவுள்ளோம். இதனால் லட்சக்கணக்கான தமிழ் நூல்களை இணையத்திலேயே படிக்கும் வசதி ஏற்படும்.

    ஆங்கிலேயர் காலத்து ஆவணங்கள், ஓலைச் சுவடிகள் மற்றும் ஓவியங்களும் பதிவேற்றம் செய்யப்படும். நூல்களை நூலகங்களில் பூட்டி வைப்பதால் பயன்கிடையாது. இதனால் உலகப்பெருவழியில் அவற்றை சேர்க்க வேண்டும்.

    நமது மருத்துவக் கண்டுபிடிப்புகளை வெளிநாட்டவர்கள் காப்புரிமை பெறுவதை தடுக்கவும் இது அவசியம். இன்னும் ஐந்தாண்டுகளில் தமிழ் நூல்கள் அனைத்தையும் மின் நூல்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    வெளிநாடு வாழ் தமிழ் இளைஞர்கள் தமிழ்ப் பண்பாட்டை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்லும் அக்கறையுடன் உள்ளனர் என்றார்.

    தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத் தலைவர் ச.தமிழ்ச்செல்வன் பேசுகையில், எழுத்தாளர்கள் சுதந்திரமாக எழுதும் நிலை ஏற்படவேண்டும். தமிழகத்தில் போலிகளைக் கொண்டாடும் சமூக நிலை உள்ளது. சாதி,மத இனபாகுபாடற்ற சமூகத்தை உருவாக்க புத்கக வாசிப்பு அவசியம் என்றார்.

    நிகழ்ச்சியில் கவிஞர் நந்தலாலா, உலகத் தமிழ்ச்சங்க தனி அலுவலர் க.பசும்பொன், நிரந்தரப் புத்தகக் காட்சி உறுப்பினர் வி.ஸ்ரீதர் ஆகியோர் உரையாற்றினர். பபாசி முன்னாள் தலைவர் ஆர்.எஸ்.சண்முகம் வரவேற்றார். செயற்குழு உறுப்பினர் சு.சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai