Enable Javscript for better performance
எண்ணூரில் புதிய அனல் மின்நிலையம்: பெல் நிறுவனத்துக்கு வழங்கிய ஒப்பந்தம் ரத்து- Dinamani

சுடச்சுட

    

    எண்ணூரில் புதிய அனல் மின்நிலையம்: பெல் நிறுவனத்துக்கு வழங்கிய ஒப்பந்தம் ரத்து

    By மதுரை  |   Published on : 08th September 2015 06:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    எண்ணூரில் அனல் மின்நிலையம் அமைக்க பெல் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

     சென்னை எண்ணூர் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் தலா 660 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட இரண்டு அலகுகளுடன் கூடிய அனல் மின்நிலையம் அமைக்க தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ஒப்பந்தப்புள்ளி கோரியது.

     இதில் திருச்சியில் உள்ள பாரத மிகுமின் நிறுவனமும் (பெல்), சீனாவைச் சேர்ந்த சென்ட்ரல் சதர்ன் சீனா எலக்ட்ரிக் பவர் டிசைன் இன்ஸ்டிட்யூட் நிறுவனமும் பங்கேற்றன. இதில், ரூ. 7,788 கோடியில் புதிய அனல் மின்நிலையம் அமைக்க பெல் நிறுவனத்துக்கு கடந்த ஆண்டு ஒப்பந்தம் வழங்கப்பட்டது.

     இதை எதிர்த்து சீன நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சஞ்சய் கே.பிள்ளை, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், "பெல் நிறுவனம் மீது பல்வேறு புகார்களைத் தெரிவித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தோம். எங்களது புகார்களைப் பரிசீலிக்குமாறு உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டது. இருப்பினும் அந்த உத்தரவை நிறைவேற்றாமல் பெல் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார்.

     இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, ஏற்கெனவே வரையறுக்கப்பட்டுள்ள ஒப்பந்த நடைமுறைகள் அனைத்தும் முறைப்படி செயல்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்தார்.  இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் சீன நிறுவனம் மேல்முறையீடு மனுவைத் தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுதாகர்,கே.பி.கே.வாசுகி ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தது.  இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் நீதிபதி ஆர்.சுதாகர், மேல்முறையீட்டு மனு மீதான உத்தரவை திங்கள்கிழமை பிறப்பித்தார். அதில், எண்ணூர் அனல் மின்நிலையம் அமைக்க பெல் நிறுவனத்துக்கு வழங்கிய  ஒப்பந்தத்தை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

     மேலும், ஒப்பந்தப்புள்ளியில் இரு நிறுவனங்களும் குறிப்பிட்ட தொகை ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வித்தியாசம் இருக்கிறது. ஆகவே, இரு நிறுவனங்களின் ஒப்பந்தப்புள்ளிகளை மறுஆய்வுக்கு உள்படுத்தி ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai