Enable Javscript for better performance
கள்ளுக்கு எதிரான கொள்கையில் மாற்றம் வேண்டும்: கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி- Dinamani

சுடச்சுட

    

    கள்ளுக்கு எதிரான கொள்கையில் மாற்றம் வேண்டும்: கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி

    By மதுரை  |   Published on : 09th September 2015 04:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழக அரசின் கள்ளுக்கு எதிரான கொள்கையில் மாற்றம் வேண்டும் என்று தமிழ்நாடு கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி கூறினார்.

      மதுரையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியது:

      உலகில் பனை மற்றும் தென்னை விளையும் 108 நாடுகளில் கள் இறக்கவும், பருகவும் தடை இல்லை, ஆனால், தமிழகத்தில் கள் தடைசெய்யப்பட்டு 29 ஆண்டுகள் ஆகின்றன.

     உச்சநீதிமன்றம் கள் குறித்த மாநில அரசு கொள்கையை மாற்றம் செய்துகொள்ளலாம் என பரிந்துரைத்தும் அதனை ஏற்க தமிழக அரசு மறுக்கிறது. கள் என்பது மென்பானம் எனும் வகையில் சேருவதால் அதை மது எனும் பிரிவில் இருந்து மாற்ற வேண்டும்.

     பனை விவசாயிகளின் வாழ்க்கையை காப்பாற்றவும், கள்ளுக்கு எதிரான கொள்கையில் மாற்றம் கொண்டு வர வலியுறுத்தியும் செப்.11ஆம் தேதி சென்னையில் உள்ள பெரியார் சிலை முன்பாக பனை பொருள்கள் வைத்து படையலிட்டு, பனையின் பயனை வலியுறுத்தி நடைபயணம் மேற்கொள்ள உள்ளோம். மகாத்மா காந்தியின் பிறந்தநாள் அன்று தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில் தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொள்ள உள்ளோம்

       கள் குறித்த விவகாரத்தில் தமிழக அரசு கேரள அரசின் கொள்கையை பின்பற்ற வேண்டும். அதற்கு தமிழகத்தில் தொலைநோக்கு சிந்தனை கொண்ட ஆட்சியாளர்கள் அவசியம். அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் கள்ளின் நன்மைகள் மற்றும் மதுவின் தீமைகள் குறித்து எடுத்துரைக்கும் வகையில் கடிதம் அனுப்பியுள்ளோம். இவர்களில் யாராவது கள், மதுவை விட தீமையானது என நிரூபிக்கத் தயாரானால் அவர்களுடன் நேரடி விவாதம் நடத்தி, அவர்கள் வெற்றி பெற்றால் ரூ.10 கோடி பரிசளிக்கவும் தயார் என்றார்.

      முன்னதாக, காந்தியவாதி சசிபெருமாளின் உருவப்படத்திற்கு பனை பொருள்கள் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. வழக்குரைஞர் அமர்நாத், உழவர் உழைப்பாளர் சங்க மாநில துணைத் தலைவர் சு.த.ராவணன், திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் ரகுநாத், மதுரை மாவட்ட குத்துச்சண்டை கழகத் தலைவர் தவமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai