Enable Javscript for better performance
\\\"தமிழகத்தில் புதிய மாற்றுக்கூட்டணி\\\'- Dinamani

சுடச்சுட

    

    தமிழகத்தில் எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு கொள்கை, குறைந்தபட்ச செயல்திட்டத்தின் அடிப்படையில் மாற்றுக்கூட்டணி அமைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் கூறினார்.

     மதுரையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் தென்மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற அவர், முன்னதாக செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதுரை அருகே கீழடியில் நடந்த அகழாய்வில் தமிழகத்தின் பழமையை வெளிப்படுத்தும் பானை ஓடுகள் உள்ளிட்டவை கிடைத்துள்ளன. ஆனால், ஆய்வைத் தொடரவேண்டாமென மத்திய அரசு உத்தரவிட்டதாக தகவல்கள் வருகின்றன. தகவல் உண்மை எனில் உத்தரவை திரும்பப்பெறுமாறு பிரதமரிடம், நேரடியாகவே தமிழக முதல்வர் பேசவேண்டும்.

     தமிழகத்தில் கடந்த 1967 ஆம் ஆண்டிலிருந்தே உருவான தேர்தல் கூட்டணி அனைத்தும் சந்தர்ப்பவாதத்தால் உருவாகியுள்ளன. கொள்கை, குறைந்தபட்ச செயல்திட்டத்தால் அவை உருவாகவில்லை. ஆகவே எதிர்வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் கொள்கை மற்றும் குறைந்தபட்ச செயல்திட்ட அடிப்படையில் கூட்டணி உருவாக்கப்பட தமிழக தேசிய முன்னணி முயற்சி மேற்கொள்ளும்.

     இலங்கைத் தமிழர் பிரச்னை, மதுவிலக்கு உள்ளிட்ட தமிழர் நலன் சார்ந்த கொள்கையில் ஒத்த கருத்துடைய கட்சிகளை கூட்டணியில் சேர்ப்போம். தேர்தலின்போதுதான் கூட்டணி உறுதியாகும்.

     இந்து மகா கடலில் சீன ஆதிக்கத்தை தவிர்க்கும் வகையிலே இலங்கைப் பிரச்னையை அமெரிக்கா அணுகிவருகிறது. ஆகவேதான் இலங்கை போர்க்குற்றம் குறித்த சர்வதேச விசாரணை தேவையில்லை என இப்போது கூறுகிறது.

     காவிரி பிரச்னையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு மத்திய அரசிதழில் வெளிவந்தாலே, அது நடைமுறையில் இருக்கிறது என்றுதான் பொருள். ஆகவே கர்நாடக அரசு உச்சநீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்தாவிடில், மத்திய அரசு 282 ஆவது பிரிவைப் பயன்படுத்தி அம்மாநிலத்துக்கான சிறப்பு நிதியை ரத்துசெய்யலாம்.

     கர்நாடக அரசின் சிறப்பு நிதியை மத்திய அரசு ரத்து செய்யாவிட்டால், உச்சநீதிமன்றத் தீர்ப்பை மத்திய அரசும் மீறியதாகவே அர்த்தமாகும் என்றார்.

     நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்துக்கு கட்சியின் மாநகர் மாவட்டத் தலைவர் வெ.ந.கணேசன் தலைமை வகித்தார். மாநிலப் பொதுச் செயலர் க.பரந்தாமன், துணைத் தலைவர் எம்.ஆர்.மாணிக்கம், சி.சாமி, செ.வீரப்பன், டாக்டர் செல்வம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai