கூட்டணி பற்றி தேர்தல் வரும்போது பார்த்துக் கொள்ளலாம்: விஜயகாந்த் பேச்சு
By மதுரை | Published on : 10th September 2015 05:10 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
கூட்டணி பற்றி தேர்தல் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்பதுதான் தேமுதிகவின் கருத்து என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கூறினார்.
தேமுதிக சார்பில் மதுரை அருகே பாசிங்காபுரத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்களுக்காக மக்கள் பணித் திட்டத்தில் முதியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பொதுக்கூட்டத்தில் அவர் பேசியது:
மதுரை மாநகராட்சிக்கு சிறந்த மாநகராட்சிக்கான விருது வழங்கப்பட்டிருக்கிறது. இந்த விருது எதற்காக வழங்கப்பட்டது எனத் தெரியவில்லை. அந்த அளவுக்கு மாநகரின் நிலை உள்ளது. முன்னாள் பிரதமர் நேரு, முன்னாள் முதல்வர் அண்ணா ஆகியோர் அரசியலை ஒரு வாரம் கடத்துவது என்பது அதிக தூரம் என்பார்கள். ஆனால், சட்டப்பேரவைத் தேர்தலுக்கு அந்த கூட்டணி, இந்த கூட்டணி என்று இப்போதே பல கட்சிகள் கூறி வருகின்றன.
இந்த விவாதம் இப்போதைக்குத் தேவையில்லை. கூட்டணி பற்றி தேர்தல் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்பது தான் தேமுதிக-வின் கருத்து. மக்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்க முடியவில்லை. இச்சூழலில் உலக முதலீட்டாளர் மாநாடு தேவைதானா. இதைச் சொன்னால் மின்சாரப் பெட்டியைத் தொட்டுப்பார் என்கிறார்கள். மக்களை யாராலும் ஏமாற்ற முடியாது. மதுரை மண்ணுக்கு பெருமை சேர்க்கக் கூடிய வீரவிளையாட்டாக இருப்பது ஜல்லிக்கட்டு. அதை நிறுத்தக் கூடாது என்றார்.
பிரேமலதா விஜயகாந்த்: வருங்கால ஆட்சி எப்படியிருக்க வேண்டும் என்பதை, நலிந்தோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதன் மூலமாக தேமுதிக சுட்டிக்காட்டி வருகிறது. தேமுதிக ஆட்சி அமைந்தால் அனைத்து தரப்பினருக்கும் பாகுபாடு இல்லாமல் நலத்திட்டங்கள் சென்றுசேரும். அதற்கு முன்னோட்டமாகவே, மாவட்டம்தோறும் எங்களது சொந்த செலவில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறோம்.
தமிழகத்தில் மாறி, மாறி ஆட்சிக்கு வந்த திமுக, அதிமுகவிடம் இந்த செயல்திட்டங்கள் இல்லை. இரு கட்சிகளுமே மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றன. திமுகவும் மக்களை ஏமாற்றும் போக்கை தான் கடைப்பிடிக்கிறது. பல முறை ஆட்சியில் இருந்தபோது மக்களைப் பற்றி சிந்திக்காத திமுக, இப்போது தேர்தலுக்காக வாய்ப்புக் கொடுங்கள் என மக்களிடம் சென்று கொண்டிருக்கிறது. ஆனால், இவ்விரு கட்சிகளையும் மக்கள் நம்பத் தயாராக இல்லை. வரும் பேரவைத் தேர்தலுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் மக்களைச் சந்திக்க வருவோம். மக்களையும், மாநிலத்தையும் உயர்த்தும் ஆட்சியை தேமுதிக வழங்கும் என்றார்.
முதியோர் 500 பேருக்கு ரூ.2 ஆயிரம் மதிப்பிலான சூட்கேஸ், பெட்சீட், டார்ச் லைட், குடை, வேஷ்டி-சேலை, இரும்பு கட்டில் போன்ற பொருள்கள் வழங்கப்பட்டன.
கட்சியின் மதுரை வடக்கு மாவட்ட செயலர் ப.பாலச்சந்திரன் தலைமை வகித்தார். தெற்கு மாவட்டச் செயலர் ஏ.கே.டி.ராஜா, மாநகர் மாவட்டச் செயலர் டி.சிவமுத்துக்குமார் உள்ளிட்டோர் பேசினர். தேமுதிக சட்டப்பேரவை கொறடா வி.சி.சந்திரகுமார், மதுரை மாநகர் மாவட்ட அவைத் தலைவர் கா.கவியரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.