Enable Javscript for better performance
திண்டுக்கல் எஸ்பி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு: உயர்நீதிமன்றம் உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    திண்டுக்கல் எஸ்பி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு: உயர்நீதிமன்றம் உத்தரவு

    By மதுரை  |   Published on : 10th September 2015 05:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஒட்டன்சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரும் மனுவை முடித்து வைத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

     திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள குளத்துத்தோட்டத்தைச் சேர்ந்தவர் முருகேசன், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரும் மனுவைத் தாக்கல்  செய்திருந்தார். அதன் விவரம்:

     எனது நிலத்தை அடமானமாக வைத்து, கரூரைச் சேர்ந்த நடராஜனிடம் ரூ.20 லட்சம் கடன் பெற்றேன். கூடுதல் வட்டி கேட்டதால் திப்பம்பட்டியை சேர்ந்த சுப்பையாவிடம்  ரூ.30 லட்சம் கடன் பெற்று, அதற்கு ஈடாக அடமானமாக வைத்திருந்த எனது நிலத்தை, சுப்பையா பெயருக்கு மாற்றம் செய்து கொடுத்தேன். இந்நிலையில் எனது நிலத்தை அபகரிக்கும் நோக்கில் மந்தவாடி ஊராட்சி தலைவர் முருகேசனுக்கு, கிரையம் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த புகாரில் சுப்பையா உள்பட 5 பேர் மீது திண்டுக்கல் மாவட்ட நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு போலீஸார் 2014 ஜூலை 31 இல் வழக்குப்பதிவு செய்தனர்.

     இந்நிலையில், சுப்பையா உள்ளிட்டோர் எனக்கு கொலைமிரட்டல் விடுத்தனர்.

    இதுகுறித்து ஒட்டன்சத்திரம் இன்ஸ்பெக்டரிடம் புகார் கொடுத்தேன். அவர், நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தேன். இதை விசாரித்த நீதிமன்றம், எனது புகார் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஒட்டன்சத்திரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு கடந்த ஜூலை 22 ஆம் தேதி உத்தரவிட்டது. இதன் பிறகும் நடவடிக்கை இல்லை.

    ஆகவே, மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஒட்டன்சத்திரம் இன்ஸ்பெக்டர் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கின்கீழ் தண்டிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

     இந்த மனு நீதிபதி ஆர்.மாலா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான ஒட்டன்சத்திரம் இன்ஸ்பெக்டர் பார்த்திபன், மனுதாரரின் புகார் மீது ஆக.28 ஆம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், வழக்குப்பதிவு செய்ய தாமதம் ஏற்பட்டதற்கு நிபந்தனையற்ற மன்னிப்புக் கோருவதாகவும் தெரிவித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரும் மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai