Enable Javscript for better performance
பிஆர்பி கிரானைட் தொழிற்சாலையில் சகாயம் குழு மீண்டும் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    பிஆர்பி கிரானைட் தொழிற்சாலையில் சகாயம் குழு மீண்டும் ஆய்வு

    By மேலூர்  |   Published on : 10th September 2015 05:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மேலூர் தெற்குத்தெருவில் உள்ள பிஆர்பி கிரானைட் பாலிஷ் தொழிற்சாலையில் சகாயம் குழுவினர் புதன்கிழமை மீண்டும் ஆய்வு செய்தனர்.

    மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கிரானைட் கற்கள் சட்ட விரோதமாக வெட்டிக் கடத்தப்பட்டது தொடர்பான வழக்கில், கிரானைட் குவாரிகளில் ஆய்வு நடத்தி அறிக்கைத் தாக்கல் செய்ய, மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியர் சகாயத்தை சட்ட ஆணையராக நியமித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில் சகாயம் கடந்த சில மாதங்களாக, மேலூர், கீழவளவு, கீழையூர், இ.மலம்பட்டி, திருவாதவூர், இடையப்பட்டி உள்ளிட்ட பல இடங்களில் ஆய்வு நடத்தி வருகிறார்.

    இந்நிலையில்,மேலூர் அருகே தெற்குத் தெருவில் உள்ள பிஆர்பி கிரானைட் பாலிஷ் தொழிற்சாலை வளாகத்தில், சட்ட ஆணையர் சகாயம் தனது குழுவினருடன் புதன்கிழமை ஆய்வில் ஈடுபட்டார். ஆய்வின்போது, லட்சம் சதுர மீட்டருக்கு மேல் உள்ள தொழிற்சாலை கட்டுமானங்களுக்கு, உள்ளூர் திட்டக் குழுமத்திடம் உரிய அனுமதி பெறப்பட்டுள்ளதா? என்றும், 347 ஏக்கர் பரப்பளவிலுள்ள தொழிற்சாலை வளாகத்தில் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான 5 கண்மாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. பாசனக் கால்வாய்கள் அழிக்கப்பட்டுள்ளன.

    இதுதொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என வருவாய்த்துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டார். அப்போது, அய்யனார்கோயிலுக்குச் செல்லும் பாதையையும் தொழிற்சாலை நிர்வாகம் ஆக்கிரமித்திருப்பதாக நரசிங்கம்பட்டி கிராம மக்கள் சகாயத்திடம் புகார் அளித்தனர். கோயிலுக்குச் செல்வோரை அனுமதிப்பதாக நிர்வாகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து மாங்குளம் பகுதியில் தொல்லியல் சின்னங்கள் உள்ள இடத்தில் இயங்கிய கிரானைட் குவாரியையும் சகாயம் பார்வையிட்டார்.

    ஆய்வின்போது, சட்ட ஆணையர் சகாயத்துடன் மதுரை மாவட்ட ஆர்.டி.ஓ.செந்தில்குமாரி, புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர் ஆறுமுகநைனார், உதவி ஆட்சியர் ராஜாராமன், மேலூர் வட்டாட்சியர் கிருஷ்ணன் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் உடன் சென்றனர்.  சட்ட ஆணையர் சகாயம் நடத்தி வரும் விசாரணை அறிக்கை செப்.15-இல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படலாம் எனக்கூறப்படுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai