Enable Javscript for better performance
சீமைக் கருவேல மரங்களை அகற்ற உயர்நீதிமன்றத்தில் வைகோ வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    சீமைக் கருவேல மரங்களை அகற்ற உயர்நீதிமன்றத்தில் வைகோ வழக்கு

    By மதுரை  |   Published on : 11th September 2015 06:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழகத்தில் சீமைக் கருவேல மரங்களை அகற்றவும், பாதிப்புகளை ஈடுகட்டவும் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை அரசு தாக்கல் செய்ய உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மதிமுக பொதுச்செயலர் வைகோ வியாழக்கிழமை மனுதாக்கல் செய்துள்ளார்.

     அவர் தாக்கல் செய்துள்ள மனு: தமிழகத்தில் ஆறுகள், கண்மாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் ஏராளமான சீமைக் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. இவை அதிக அளவு நீரை உறிஞ்சும் தன்மை கொண்டதால் நீர்நிலைகள் வறண்டு போகின்றன.  மேலும் காற்றில் உள்ள ஆக்சிஜன் மற்றும் ஈரப்பதத்தை உறிஞ்சுவதால் சுற்றுச்சூழல் மாசு அடைந்துள்ளது.

     தமிழகத்தில் 1960 ஆம் ஆண்டில் இந்த சீமைக் கருவேல மரக்கன்றுகள் கொண்டு வரப்பட்டு நடப்பட்டுள்ளன. பின்னர் அந்த மரங்கள் அனைத்து இடங்களுக்கும் பரவி வளர்ந்து விட்டன. இவை விவசாயம் மற்றும் நீலத்தடி நீராதாரத்துக்கு பேரிழப்பை ஏற்படுத்தியுள்ளன. இத்தகைய சீமைக் கருவேல மரங்களை அகற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

     இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தமிழகத்தில் நீர்நிலைகள் மற்றும் பிற இடங்களில் வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களை வேரோடு அகற்ற 2013 இல் உத்தரவிட்டது.

     இந்த உத்தரவை நிறைவேற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. உயர்நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி, உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசின் தலைமைச் செயலர் மற்றும் தென் மாவட்ட ஆட்சியர்களுக்கு மனு அனுப்பினேன். ஆனால் நடவடிக்கை ஏதும் இல்லை.

      எனவே சீமைக் கருவேல மரங்களை அகற்றவும் பாதிப்புகளைச் சரி செய்யவும் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டு உள்ளார். இம்மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai