Enable Javscript for better performance
பிஆர்பி சொத்துகளை கையகப்படுத்தக்கோரும் வழக்கு சென்னைக்கு மாற்றம்- Dinamani

சுடச்சுட

    

    பிஆர்பி சொத்துகளை கையகப்படுத்தக்கோரும் வழக்கு சென்னைக்கு மாற்றம்

    By மதுரை  |   Published on : 11th September 2015 06:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பி.ஆர்.பி. நிறுவனத்தின் சொத்துகளை கையகப்படுத்தி நிலமற்ற ஏழைகளுக்கு வழங்க உத்தரவிடக்கோரும் வழக்கை, சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

     மதுரை மாவட்டம் நொண்டிக்கோவில்பட்டியைச் சேர்ந்த சோமசுந்தரம் இம்மனுவைத் தாக்கல் செய்திருந்தார். மனுவில், கிரானைட் முறைகேடு தொடர்பாக பிஆர்பி. கிரானைட் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். வழக்கு விசாரணையின் போது, பிஆர்பி. நிறுவனத்துக்கு தமிழகம் முழுவதும் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் இருப்பது போலீஸாருக்கு தெரியவந்தது. நிலச்சீர்த்திருத்த சட்டப்படி, 5 பேர் கொண்ட ஒரு குடும்பத்தினர் சொந்தமாக 15 ஏக்கர் நிலம் மட்டுமே வைத்திருக்க முடியும். ஒரு குடும்பத்தில் 5 பேருக்கும் அதிகமாக இருந்தால், கூடுதலாக உள்ள ஒவ்வொருவரும் தலா 5 ஏக்கர் நிலம் வைத்திருக்கலாம். மேலூர் தாலுகாவில் பிஆர்பி. நிறுவனத்துக்கு 1,834 ஏக்கர் நிலமும், மதுரை வடக்கு தாலுகாவில் 934 ஏக்கர் நிலமும் வைத்திருப்பதாக தகவல் உரிமை சட்டத்தின் கீழ் வட்டாட்சியர் தகவல் அளித்துள்ளார். இந்த 2 தாலுகாக்களில் மட்டும் பிஆர்பி. நிறுவனம் 2 ஆயிரத்து 769 ஏக்கர் நிலம் வைத்துள்ளது. பிஆர்பி. நிறுவனம் நில சீர்த்திருத்த சட்டத்தை மீறி நிலங்களை வாங்கி உள்ளது.

      எனவே, பிஆர்பி. நிறுவனம் மீது நிலச் சீர்த்திருத்த சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், கூடுதலாக உள்ள நிலத்தை கையகப்படுத்தி நிலமற்ற ஏழைகளுக்கு வழங்கவும் உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

     இந்த மனு நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, வி.எஸ்.ரவி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது கிரானைட் முறைகேடு தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai