Enable Javscript for better performance
வழக்குரைஞர்கள் பேரணி, ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    மதுரையில் வியாழக்கிழமை அனைத்து வழக்குரைஞர்கள் சங்கத்தினர் பேரணியாகச் சென்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

     மதுரை அனைத்து வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் நீதித்துறை மீதான புகார்கள் குறித்து மக்கள் கவனத்துக்கு எடுத்துச்செல்லும் வகையில் பேரணி, ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

     இதையடுத்து வியாழக்கிழமை காலையில் மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்திலிருந்து புறப்பட்ட பேரணியில் மதுரை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் பங்கேற்றனர்.  பேரணி குறித்து மாவட்ட வழக்குரைஞர்கள் சங்கச் செயலர் ஏ.கே.ராமசாமி கூறுகையில், நீதித்துறை மீதான புகார்கள் குறித்து உரிய விசாரணை நடத்தப்படவேண்டும் என்றார்.

     பின்னர் பேரணியானது டாக்டர் அம்பேத்கர் சாலை, அழகர்கோயில் சாலை, கோரிப்பாளையம், பனகல் சாலை, அண்ணா பேருந்து நிலையம், ஆவின் சந்திப்பு, கே.கே.நகர் சாலை, மாட்டுத்தாவணி வழியாகச் சென்றது. இதில் இருசக்கர வாகனம், பேருந்துகளில் வழக்குரைஞர்கள் அணிவகுத்துச் சென்றனர்.

     பேரணி வந்த பாதையில் போக்குவரத்து மாற்றிவிடப்பட்டது. காவல்துறை துணை ஆணையர் (போக்குவரத்து) பாபு தலைமையில் ஏராளமான போலீஸார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

     உயர்நீதிமன்ற மதுரைக்கிளையை பேரணி அடைந்ததும், அங்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அங்கு பேரணி, ஆர்ப்பாட்டத்தை விளக்கி வழக்குரைஞர்கள் சங்கத்தினர் விளக்கிப் பேசினர்.

     அப்போது, புகார் கூறப்படும் 6 நீதிபதிகள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டது.

    திருமங்கலம்

    மதுரை வழக்குரைஞர்கள் சங்கத்திற்கு ஆதரவாக திருமங்கலம் வழக்குரைஞர்கள் வியாழக்கிழமை நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து வழக்குரைஞர்கள் சங்கச் செயலர் கே.ஆர்.கேசவன் கூறியது: வழக்குகளை விரைந்து முடிக்க நடத்தப்படும் லோக் அதாலத் நடைமுறையில் உள்ள குறைகளை கண்டித்து செப்.11 மற்றும் 12ஆம் தேதிகளில் திருமங்கலம் வழக்குரைஞர்கள் சங்கத்தினர் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட உள்ளனர் என்றார். அவருடன் வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் சி.ராமசாமி, துணைச்செயலர் ஜி.அடைக்கலம் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai